தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பரபர குற்றச்சாட்டுகள்- சுட சுட பதிலடிகள்!!
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு 6 கட்டங்களைத் தாண்டிவிட்ட நிலையில் பிரசார களம் கோடை வெயிலை விட தகதகவென தகித்துக் கொண்டிருக்கிறது. நாள்தோறும் பரபரப்பான குற்றச்சாட்டுகளும் சுடச்சுட பதிலடிகளுமென 'ரணகளமாக' காட்சியளிக்கிறது லோக்சபா தேர்தல் பிரசார களம்
லோக்சபா தேர்தல் பிரசார களத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி சார்பில் சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காதான் நட்சத்திர பேச்சாளர்கள்.. எதிர்க்கட்சியான பாஜகவில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிதான் எல்லாவற்றுக்கும் பதிலடி கொடுப்பதும் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைப்பதுமாக இருக்கிறார்.
காங்கிரஸ்- பாரதிய ஜனதா இடையேயான மோதல் மெல்ல மெல்ல விஸ்வரூபமெடுத்து பாஜக- திரிணாமுல் காங்கிரஸ், பாஜக- தேசிய மாநாட்டு கட்சி என்றும் விரிவடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பிரசார களத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்- அவற்றுக்கான பதிலடிகளின் ஒரு தொகுப்பை பார்க்கலாம்.

தலித்துகள் வீட்டுக்கு தேனிலவு போகும் ராகுல் - ராம்தேவ்
தற்போதைய தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கும் யோகா குரு பாபா ராம்தேவ் லக்னோவில் பேசுகையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலித்துகளின் வீட்டுக்கு சுற்றுலா செல்வது போல, தேனிலவுக்கு செல்வது போல சென்று வருகிறார் என்று கூறினார்.

ராம்தேவுக்கு எதிராக கொந்தளித்த எதிர்க்கட்சிகள்..
ராகுலை விமர்சிக்கிறேன் என்று தலித்துகளையும் இழிவாகப் பேசிவிட்டார் ராம்தேவ் என்று கொந்தளித்தன எதிர்க்கட்சிகள். தேர்தல் ஆணையத்துக்கும் புகார்கள் பறந்தன. அத்துடன் நாடு முழுவதும் ராம்தேவுக்கு எதிராக போராட்டங்களும் வெடித்தன. இதன் உச்சமாக நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுப்போம் என்று பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்தது. இப்போது தேர்தல் ஆணையம், ராம்தேவுக்கு தடை விதித்துள்ளது.

கபில்சிபலின் ஹவலா தொடர்பு- மோடி
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமது பிரசாரம் ஒன்றில் பேசுகையில், மத்திய அமைச்சர் கபில்சிபல் குடும்பத்தினருக்கு ஹவாலா கும்பலோடு தொடர்பிருக்கிறது என்றார்.

காங்கிரஸ்- பாஜக பரஸ்பர பதிலடிகள்
இதற்கு காங்கிரஸ் கட்சி ஒரு பதிலடி கொடுத்தது. ஹவாலா மோசடி மன்னன் அஃப்ரோஸ் பட்டாவும் நரேந்திர மோடியும் இருக்கும் ஒரு புகைப்படத்தை காங்கிரஸ் வெளியிட்டது. பாஜகவும் சும்மா இருக்கவில்லை. காங்கிரஸின் முகமது அஸாருதீனும் அதே பட்டாவும் இருக்கும் மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டு களேபரமாக்கிவிட்டது.

மமதாவை வெளுத்து வாங்கிய மோடி
மேற்கு வங்க மாநிலத்தில் பிரசாரம் செய்த நரேந்திர மோடி, அம்மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரையும் போட்டுத் தாக்கியதுதான் இப்போதைய ஹைலட் பஞ்சாயத்துகளில் பிரதானம். சட்டவிரோத வங்கதேச குடியேறிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறார் மமதா. பாஜக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் மூட்டை முடிச்சுகளோடு வங்கதேசத்துக்கு விரட்டப்படுவார்கள் என்று கூறினார் மோடி.

மோடி ஒரு பிசாசு- மமதா பதிலடி
இதற்கு மமதா பானர்ஜி பதிலடி கொடுக்கையில், மோடி ஒரு பிசாசு.. வங்க மொழி பேசினாலே வங்கதேசத்தவர் என்று முத்திரை குத்துவதா? குஜராத்தை ரத்த ஆற்றில் மூழ்க வைத்த மோடி, மேற்கு வங்கத்தை ரத்த கடலில் மூழ்க வைக்க முயற்சிக்கிறார் என்று பதிலடி கொடுத்தார்.

மமதா ஓவிய சர்ச்சை
மேலும் மமதா பானர்ஜி வரைந்த ஓவியத்தை சர்ச்சைக்குரிய சாரதா சிட் பண்ட் நிறுவனம் கோடி ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கியதாக மோடி கூற, அதை நிரூபிக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கெடு விதித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

கசாப்பு கடைக்காரர் மோடி
அத்துடன் குஜராத்தின் கசாப்பு கடைக்காரர் மோடி என்றும் சொந்த மனைவியையே வைத்து காப்பாற்ற முடியாத மோடியால் நாட்டை காப்பாற்ற எப்படி முடியும் என்றும் கேள்வி எழுப்பியது திரிணாமுல் காங்கிரஸ்.

ஃபரூக் அப்துல்லா சாடல்
இதேபோல் ஸ்ரீநகரில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா, மதவாதிகள் கையில் நாடு போனால் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரே இருக்காது.. மோடிக்கு ஓட்டுப் போடுகிறவர்கள் கடலில் விழ வேண்டியதுதான் என்றார்.

ஃபரூக் அப்துல்லாவுக்கு மோடி பதிலடி
இதற்கும் மோடி பதிலடி கொடுத்தார். மதச்சார்பின்மை எங்கள் ரத்தத்தில் இருக்கிறது. .ஜம்மு காஷ்மீரில் மதச்சார்பின்மையை நாசப்படுத்தியதே ஃபரூக் அப்துல்லாவும் அவரது குடும்பமும்தான்.. எங்களுக்கு ஓட்டுப் போட்டால் கடலில் விழ வேண்டும் என்று சொல்பவர்கள் தங்களது முகத்தையும் கண்ணாடியில் பார்க்க வேண்டும் என்றார் மோடி.

பஞ்சாயத்துக்கு வந்த ஒமர் அப்துல்லா
இந்த பஞ்சாயத்தில் தம் பங்குக்கு களம் இறங்கினார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. மோடிக்கு பதிலளித்த அவர், "நாட்டின் பிரதமராக வர விரும்பும் மோடிக்கு ஜம்மு காஷ்மீரில் பிரசாரம் செய்வதற்கு தைரியம் இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார்.
கடந்த ஒரு சில நாட்களாக நடந்த பஞ்சாயத்துகள்தான் இன்னும் பிரசாரம் களத்தை பற்றி எரிய வைக்க இருப்பது எத்தனையோ?












Click it and Unblock the Notifications