ஜம்மு காஷ்மீர்: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்- மாஜி முதல்வர்கள் கைது- யெச்சூரி கண்டனம்
ஶ்ரீநகர்: தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரத்தில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவானது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துகளை வழங்கி வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்த 370-வது பிரிவை ரத்து செய்தது.

காஷ்மீர் 2 ஆக பிரிப்பு
மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 ஆகவும் பிரித்தது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் யூனியன் பிரதேசம் ஆகியவை புதியதாக உருவாக்கப்பட்டன. இதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறாத வகையில் அம்மாநில அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பல மாதங்களுக்குப் பின்னரே அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் படிப்படியாக விடுவிக்கப்பட்டனர்.

தொகுதி மறுசீரமைப்பு
இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னோட்டமாக தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் ஜம்மு காஷ்மீரில் ஜம்மு பிராந்தியத்துக்கு கூடுதலாக 6 தொகுதிகளும் காஷ்மீர் பகுதிக்கு கூடுதலாக ஒரு தொகுதியும் உருவாக்க பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இது மக்கள் தொகை விகிதத்துக்கு எதிராக இருக்கிறது என்பது ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டு.

மாஜி முதல்வர்கள் கைது
தொகுதி மறுசீரமைப்பு ஆணையக் குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பான குப்கர் கூட்டணி அறிவித்தது. இதனைத் தடுக்க புத்தாண்டு தினமான நேற்று முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். அவர்களது வீடுகள் முன்பாக பெருமளவில் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஜம்மு காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது.
Recommended Video

யெச்சூரி கண்டனம்
ஜம்மு காஷ்மீரில் அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள யெச்சூரி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்த முயன்ற தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளது கண்டனத்துக்குரியது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் யெச்சூரி வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications