இந்தியாவில், 1985-ல் இயற்கையாக இறந்தார் நேதாஜி... எழுத்தாளர் அனுஜ்தார் புதுத் தகவல்!
டெல்லி: நாட்டின் விடுதலைக்காக ராணுவம் அமைத்து போரிட்ட நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் 1985ஆம் ஆண்டு இந்தியாவின் பைசாபாத் நகரில் இயற்கையாகத்தான் மரணமடைந்தார் என்று எழுத்தாளர் அனுஜ்தார் அதிர வைக்கும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தைவான் விமான விபத்தில் இறந்துவிட்டார் என்று கூறப்பட்டு வந்தது... ஆனால் ரஷ்யா அதிபராக இருந்த ஸ்டாலினால் கைது செய்யப்பட்டு சைபீரியா சிறையில் கொடூரமாக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவின் பைசாபாத் நகரில் 1985ஆம் ஆண்டு வரை நேதாஜி உயிரோடு இருந்தார்.. அவர் இயற்கையாக மரணம் அடைந்தார் என்று புதிய குண்டு வீசியுள்ளார் எழுத்தாளர் அனுஜ் தார்.
"India's biggest cover up" என்ற தலைப்பில் நேதாஜி தொடர்பாக புத்தகம் எழுதியுள்ள அனுஜ்தார் 'ஒன் இந்தியாவுக்கு' அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளதாவது:

பகவான்ஜி..
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1985ஆம் ஆண்டு பைசாபாத்தில்தான் இயற்கையாக மரணம் அடைந்தார். குறிப்பாக 1985ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ந் தேதியன்று பைசாபாத் இல்லத்தில் நேதாஜி காலமானார். அங்கு அவர் பகவான்ஜி என அழைக்கப்பட்டார். இருப்பினும் உள்ளூர் மக்கள் அனைவருக்குமே தெரியும் அது நேதாஜிதான் என்பது..

ஆவணங்களை வெளியிடுங்கள்..
இந்த விவகாரத்தில் மத்திய அரசு விசாரணை குழு அமைப்பது என்பதெல்லாம் இழுத்தடிக்கும் ஒரு செயலே. நமது நாட்டின் உளவு அமைப்பும் ரா போன்ற அமைப்புகளும் முந்தைய ஆட்சியாளர்களைப் பாதுகாக்கவே பகீரத பிரயத்தனம் செய்கின்றனர். நேதாஜி விமான விபத்தில் இறந்துவிட்டார் எனில் வெளிப்படையாக அது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டுவிட்டுப் போகலாமே... இதுவரை அப்படியெல்லாம் அவர்கள் செய்துவிடவில்லை. நாட்டின் ஆவண காப்பகத்தில் உள்ள அனைத்து ஆவணங்களும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். நாட்டின் விடுதலைக்காக போராடிய முதன்மையான தலைவர்களில் ஒருவர் நேதாஜி. மகாத்மா காந்தி தொடர்பான ஆவணங்களை இப்படி மறைத்துவிடுவார்களா? நிச்சயம் அப்படிச் செய்யமாட்டார்கள். மத்திய அரசு அமைக்கும் குழுக்கள் எதனையும் சாதித்துவிடப் போவதில்லை..

சட்டம் ஒழுங்கு அச்சம்
என்னுடைய 15 ஆண்டுகால ஆராய்ச்சிகளின் முடிவாக இந்த அரசுக்கு நன்கு தெரியும்... நேதாஜி நிச்சயம் விமான விபத்தில் இறக்கவில்லை என்பது... நேதாஜி பற்றிய உண்மைகளை வெளியிட்டால் மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு ஏற்படும் என்று மத்திய அரசு கருதுகிறது.. அதற்காக உண்மையை மறைத்துக் கொண்டிருக்கவா முடியும்?
மத நிகழ்வுகளால் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகிறது எனக் கூறி அந்த நிகழ்ச்சிகளை தடையா செய்துவிட்டோம் இல்லையே.? நேதாஜி தொடர்பான அத்தனை கோப்புகளும் வெளியானால் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள்?

மத்திய அரசுக்கு நன்கு தெரியும்...
நேதாஜி பைசாபாத்தில் இருந்ததை மத்திய அரசுகள் நன்கு அறியும். அப்போதைய மத்திய அரசும் அவருடன் தொடர்பில் இருந்தது...மத்திய அரசின் தூதர்கள் அவரை சந்தித்து விட்டும் சென்றிருக்கின்றனர்.. ஆனால் நேதாஜி சில நெருக்கடிகளால் வெளியே வர முடியாத நிலை இருந்தது.

நேதாஜி வெளியே விரும்பாத மத்திய அரசு
மத்திய அரசுகளும் நேதாஜி தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை விரும்பவில்லை. இந்த நாட்டுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என்று அப்போதைய மத்திய அரசு விரும்பாமல் இருந்தது. அப்படி நேரு வெளியே வந்தால் மகாத்மா காந்தி குறித்த பிம்பம் உடைபட்டுப் போகும் என நேரு கருதியிருக்கலாம்.. அதனால்தான் நேதாஜி வெளியே வருவதை அவர் விரும்பாமல் இருந்திருக்கலாம்.
இவ்வாறு அனுஜ்தார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications