மங்கள்யான் சிக்கல் தீர்ந்தது: புவி வட்டப்பாதை 1,18,000 கிலோ மீட்டரை எட்டியது
ஸ்ரீ ஹரிகோட்டா: செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான்' விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு இன்று அதிகாலை சரி செய்யப்பட்டு விட்டதாக இஸ்ரோ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட 'மங்கள்யான்' விண்கலம், பி.எஸ்.எல்.வி,சி25 ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்தை நோக்கி கடந்த 5ம் தேதி விண்ணிற்கு செலுத்தப்பட்டது.
புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம், கடந்த 7ம் தேதி முதல் படிப்படியாக புவி வட்டப்பாதையின் ஒவ்வொரு சுற்றாக முன்னேற்றப்பட்டு அதன் வேகம் அதிகரிக்கப்படுகிறது.

4 வது சுற்றுப்பாதை
இந்த நிலையில் திங்கட்கிழமையன்று அதிகாலை 2.06 மணிக்கு 3வது சுற்றுப்பாதையில் இருந்து 4 ஆவது சுற்றுப்பாதைக்கு மங்கள்யான் முன்னேற்றப்படுவதாக இருந்தது. இதன் மூலம் பூமியில் இருந்து, 100,000 கி.மீ தூரத்திற்கு மங்கள்யான் உயர்த்தப்பட இருந்தது.

மங்கள்யானில் கோளாறு
ஆனால், இயந்திரக் கோளாறு காரணமாக சுற்றுவட்டப்பாதையை அதிகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து, இஸ்ரோ தனது செவ்வாய்கிரகத் திட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் அப்டேட் செய்தது.
மங்கள்யான் விண்கலத்தில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக, புவி வட்டப்பாதையின் 4வது சுற்றுக்கு விண்கலத்தை முன்னேற்றுவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. அக்கோளாறு சரி செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்திருந்தது.

புவிவட்டப்பாதை அதிகரிப்பு
இந்நிலையில், இன்று காலையில் கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாக இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார். புவி வட்டப்பாதை அதிகரிக்கப்பட்டுவிட்டதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

ஃபேஸ்புக்கில் அப்டேட்ஸ்
இது குறித்து, செவ்வாய்கிரகத் திட்டம் பற்றிய ஃபேஸ்புக் பக்கத்திலும் காலை 5.10 மணியளவில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும், பூமியில் இருந்து, 118,000 கி.மீ தூரத்திற்கு மங்கள்யானின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் செவ்வாய் கிரகத் திட்டத்தை தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் மக்களுக்கு இடைவிடாமல் அப்டேட்ஸை வழங்கி வருகிறது இஸ்ரோ. இதனை 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications