காஷ்மீர் வழக்கில்.. மக்களுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும்.. குலாம் நபி ஆசாத் நம்பிக்கை
ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்கு சாதகமாக இருக்கும் என்று குலாம் நபி ஆசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டது. அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அரசியல் சாசனம் உள்ளிட்ட சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது பிரிவும் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்தது.

அதுமட்டும் இன்றி 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் யூனியன் பிரதேசம் என 2 ஆக பிரிக்கப்பட்டது. முன்னதாக ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
நாளை தீர்ப்பு: ஜம்மு காஷ்மீரில் அதிக அளவு பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் சட்ட சபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டாலும் அங்கு இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. துணை நிலை ஆளுநர் தான் மாநிலத்தை நிர்வகித்து வருகிறார். இதற்கிடையே, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு நீக்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமானோர் வழக்குகள் தொடர்ந்தனர்.
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர், வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இந்த வழக்குகளைத் தொடர்ந்தனர். 370-வது பிரிவு ரத்துக்கு எதிராகவும் ஜம்மு காஷ்மீர் 2 ஆக பிரிக்கப்பட்டதற்கு எதிராகவும் இந்த வழக்குகள் தொடரப்பட்டன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
குலாம் நபி ஆசாத் நம்பிக்கை: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்க போகும் இந்த தீர்ப்பை ஒட்டு மொத்த தேசமும் எதிபார்த்து உள்ளது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தற்போது தனிக்கட்சி தொடங்கியுள்ளவருமான குலாம் நபி ஆசாத், உச்ச நீதிமன்றம் நாளை அளிக்க போகும் தீர்ப்பு மக்களுக்கு சாதகமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக குலாம் நபி ஆசாத் கூறுகையில், “நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். பாராளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகிய இரண்டே இரண்டு அமைப்புகளால் தான் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ வை திருப்பி வழங்க முடியும். உச்ச நீதிமன்றம் கட்சி சார்பற்றது. மக்களுக்கு சாதகமான தீர்ப்பை அளிக்கும் என நம்புகிறேன்” என்றார்.
உமர் அப்துல்லா கருத்து: அதேபோல், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா கூறியதாவது:- உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும் என நம்பிக்கையும் பிரார்த்தனையும் மட்டுமே வைக்க முடியும். தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். தீர்ப்பு வரட்டும். அதற்கு பிறகு பேசலாம் என்று செய்தியாளர்கள் தீர்ப்பு குறித்து கேட்ட போது கூறினார்.












Click it and Unblock the Notifications