இரவோடு இரவாக எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ட்ரோன்கள்.. ஒரே வாரத்தில் 3வது சம்பவம்.. பதற்றம்!
ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன்கள் ஊடுருவ முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு எல்லையில் ஊடுருவ முயன்ற ட்ரோன்களை இந்திய ராணுவம், சுட்டு வீழ்த்தியது. ஒரே வாரத்தில் 3வது முறையாக எல்லையில் தென்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் தென்பட்டுள்ளதால் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக நாம் பார்க்கலாம்.
காஷ்மீர் பகுதியில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பஹல்காம் தாக்குதல் நடந்ததிருந்தது. அதைத் தொடர்ந்து எல்லையில் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. அப்போது சில நாட்கள் தாக்குதல்களும் கூட தீவிரமாக நடந்தது. பாகிஸ்தான் ராணுவம் கேட்டுக் கொண்டதாலேயே அந்த தாக்குதல் முடிவுக்கு வந்தது.

எல்லையில் பதற்றம்
அதேநேரம் இன்னுமே எல்லையில் முழுமையாக அமைதி திரும்பவில்லை. எல்லையில் பாகிஸ்தான் சில சர்ச்சை செயல்களைச் செய்வதும் இந்தியா அதற்குத் தக்கப் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கிடையே அப்படியொரு ஷாக் சம்பவம் தான் மீண்டும் நடந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தின் ராம்நகர் செக்டாரில், சர்வதேச எல்லை அருகே உள்ள கேசோ மஹன்சன் கிராமத்திற்குள் நுழைய பாகிஸ்தான் ட்ரோன்கள் முயன்றுள்ளன. பாகிஸ்தான் பகுதியில் இருந்து ட்ரோன்கள் வருவது கண்டறியப்பட்டதால், அப்பகுதி ஹை அலர்ட் நிலைக்கு வந்துவிட்டது.. அதேபோல பூஞ்ச் மாவட்ட டெக்வார் கிராமத்தில் இரவு 7:30 மணியளவில் பத்து நிமிடங்கள் ஒரு ட்ரோன் போன்ற பொருள் பறந்தது. இந்திய இராணுவம் அதை சுட்டு வீழ்த்தியது..
ராணுவம்
கடந்த சில நாட்களில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மூன்றாவது முறையாக ட்ரோன் மூலம் ஊடுருவ பாகிஸ்தான் முயன்றுள்ளது. இது தொடர்பாகக் கடந்த செவ்வாய்க்கிழமை பேசிய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, "கட்டுப்பாட்டுக் கோடு வழியாக சமீபத்திய ட்ரோன் நடமாட்டங்களைக் கண்காணித்து வருகிறோம். இது தொடர்பாக பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாதவை" என்றார்.
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானுடன் DGMO மட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் அதில், ஜம்மு காஷ்மீரில் கண்டறியப்பட்ட ட்ரோன் நடமாட்டம் குறித்து இந்தியா கவலை பதிவு செய்ததாகவும் திவேதி தெரிவித்தார்.. அவர் மேலும், "பாகிஸ்தான் அதன் ட்ரோன்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கூறியுள்ளோம். மேற்கு எல்லையின் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ள 'ஆபரேஷன் சிந்துர்' இன்னும் தொடரவே செய்கிறது. தாக்குதலை நாங்கள் நிறுத்தியிருந்தாலும் அந்த மிஷன் தொடரவே செய்கிறது" என்றார்.
என்ன காரணம்!
இப்போது ஜம்மு காஷ்மீரில் காணப்படும் ட்ரோன்கள் சிறியவை.. அதில் வெடி பொருட்கள் உட்படத் தாக்கும் திறன் எதுவும் இல்லையாம். எல்லையில் இந்தியா என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்கிறது என்பதைக் கண்காணிக்க பாகிஸ்தான் இதுபோல டிரோன்களை அனுப்பி இருக்கலாம் என்று அவர் கூறியிருந்தார். திவேதி கடந்த செவ்வாய்க்கிழமை இந்தக் கருத்தைக் கூறினார். அவர் இதுபோல பேசிய சில மணி நேரத்திலேயே ராஜௌரி செக்டாரின் துங்காலா-நப்லா பகுதி அருகே பல பாகிஸ்தான் ட்ரோன்கள் கண்டறியப்பட்டன.
இந்தச் சூழலில் தான் மூன்றாவது முறையாக மீண்டும் அங்கு டிரோன்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்திய ராணுவமும் அதை சுட்டு வீழ்த்தி அழித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அங்கு அதிகரித்து வருவதால் பதற்றம் அதிகரித்தே வருகிறது.












Click it and Unblock the Notifications