ஒடிசாவில் பரபரப்பு... மக்கள் கூட்டத்தில் புகுந்த எம்எல்ஏவின் கார்! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
புபனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-இன் கார் மக்கள் கூடியிருந்த இடத்தில் புகுந்ததில் மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் தற்போது பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சியில் உள்ளது. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் ஒடிசா முதல்வராக உள்ளார்.
இந்நிலையில் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏ ஒருவரின் கார், மக்கள் கூட்டத்தில் மீது மோதியதில் மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து
ஒடிசா மாநிலம் குர்தா மாவட்டத்தில் உள்ள பானாபூர் பகுதி அருகே மக்கள் கூடியிருந்த இடத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ பிரசாந்த் ஜக்தேவின் வாகனம் மோதி உள்ளது. இந்த விபத்தில் 10 காவலர்கள் மற்றும் இரண்டு பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 23 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பானாபூர் பிடிஓ அலுவலகத்திற்கு வெளியே தேர்தல் தொடர்பான நடவடிக்கை நடந்து கொண்டிருந்த போது இந்த மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது.

எம்எல்ஏ மீது தாக்குதல்
இந்த விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த சிலர் பிரசாந்த் ஜக்தேவ் மீது கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பிரசாந்த் ஜக்தேவ் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் முதலில் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புபனேஷ்வரில் உள்ள எய்மஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து தொடர்பாகக் கொலை முயற்சி உள்ளிட்ட பல பிரிவுகளில் பிரசாந்த் ஜக்தேவ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடும் கண்டனம்
போலீஸ் கஸ்டடியில் சிகிச்சை பெற்று வரும் பிரசாந்த் ஜக்தேவ், சிகிச்சை முடிந்ததும் கைது செய்யப்படுவார் என போலீஸ் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது இதுட தொடர்பாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை பிஜு ஜனதா தளம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

முதல்முறை இல்லை
பிரசாந்த் ஜக்தேவ் இதுபோல சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த ஆண்டு ஒடிசாவில் எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவின் தலித் தலைவர் ஒருவரைத் தாக்கிய விவகாரத்தில் இவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். மேலும், கடந்த 2016இல் மன்முண்டா பகுதியில் பாஜக தொண்டர்களைத் தாக்கியதாகவும், 2018இல் போல்கர் தாசில்தாரைத் தாக்கியதாகவும், 2020 இல் சிலிகா மேம்பாட்டு ஆணையத்தின் ஊழியர்களைத் தாக்கியதாகவும் இவர் மீது புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications