பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்! சேர்களை வீசி கொடூர தாக்குதல்! பதற வைக்கும் சம்பவம்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் இப்போது தேசியளவிலான கபடிப் போட்டிகள் நடந்து வருகிறது. அப்போது தமிழக வீராங்கனைகள் கலந்து கொண்ட போட்டியின் போது நடுவர் தமிழக வீராங்கனையைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் இப்போது தேசிய அளவிலான கபடிப் போட்டிகள் நடந்து வருகிறது. அதன்படி இன்று நடந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் களமிறங்கினர்.

பஞ்சாப் வீராங்கனைகள் மீது தாக்குதல்:
பஞ்சாபில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிடையே நடைபெற்ற கபடிப் போட்டியின் போது திடீரென தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஃபவுல் அட்டாக் குறித்து முறையிட்ட போது நடுவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதாவது தர்பாங்கா பல்கலைக்கழக வீராங்கனைகள் ஃபவுல் அட்டாக் நடத்தியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனைகள் முறையிட்ட போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதிர்ச்சி தரும் வீடியோ:
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதில் முதலில் ஃபவுல் அட்டாக் தொடர்பாக வீராங்கனைகள் வாக்குவாதம் செய்வது தெரிகிறது. பின்பு, ஒரு வீராங்கனை அங்கிருந்து கிளம்பிய நிலையில், அவரிடம் வந்த நடுவர் அவரை தாக்கியது போல இருக்கிறது. உடனடியாக அங்கு அனைவரும் ஒன்றுகூட கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் முறையீடு செய்த பல்கலைக்கழக பயிற்சியாளர் பாண்டி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கைதும் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் ஒருவர் நடந்த சம்பவத்தை விளக்குகிறார். காயம்பட்ட தமிழக மாணவிகள் இருக்கையில் அமர்ந்து இருக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளதோடு, பின்னணியில் சம்பவம் பற்றி அந்த நபர் விளக்கி உள்ளார்.
அதில் அவர், ‛‛பஞ்சாப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பல்கலைக்கழக கபடி போட்டியில் ஒட்டன்சத்திரமும், தர்பங்ஹா அணியும் விளையாடியது.இதில் பாயிண்ட் கேட்கபோன நம் வீராங்கனைகளை அடித்துவிட்டனர். இதனால் பல வீராங்கனைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தட்டிக்கேட்க போன பிற தமிழக வீராங்கனைகளையும் அடித்துவிட்டனர். பிள்ளைகள் என்று கூற பாராமல் சேரை எடுத்து அடிக்கின்றனர். கேட்கபோன எங்களையும், கோச்சையும் தள்ளிவிடுகின்றனர். இதுக்கு என்ன முடிவு என்று தெரியவில்லை. ஒரு பெண்ணால் நடக்க கூட முடியவில்லை’’ என வருத்தத்துடன் கூறியுள்ளார்.
பாதுகாப்பாக உள்ளனர்:
இதனால் பஞ்சாபில் உள்ள தமிழ்நாடு வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனரா என்பது குறித்தும் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கிடையே பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் பாதுகாப்பாக இருப்பதாகத் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் மேக்நாத் ரெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பஞ்சாபில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசியதாகவும் பயிற்சியாளர் விசாரணைக்காகவே அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், தமிழக கபடி வீராங்கனைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் கண்டனம்:
தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, "இன்று(23.01.2025) பஞ்சாபில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிடையே கபடிப் போட்டியின் போது ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதைக் கண்டித்து கேள்வி எழுப்பிய தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். மேலும் தமிழ்நாட்டின் கபடிப் பயிற்சியாளரை கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது. தமிழ்நாட்டின் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு, நம் மாநில விளையாட்டு வீரர்களைப் பாதுகாக்க வேண்டுமெனவும், பஞ்சாபில் இருந்து அவர்களைப் பத்திரமாக அழைத்து வரவேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், பலரும் தமிழக வீராங்கனைகளைப் பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications