காசி தமிழ்ச் சங்கமம்.. ரயிலில் அத்துமீறிய வடமாநிலத்தவர்.. கலைஞர்கள் மீது தாக்குதல்.. என்ன நடந்தது?
நாக்பூர்: காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்காக தமிழக கலைஞர்கள் சென்ற ரயிலில் வடமாநிலத்தவர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் இருந்த பெட்டியில் வடமாநிலத்தவர் ஜன்னல் வழியாக நுழைந்து திறந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு - காசி இடையிலான பழமையான உறவை புதுப்பிக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக கேடிஎஸ் 3.0 என்ற பெயரில் காசி தமிழ்ச் சங்கமத்தின் 3ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து 2,400 பேர் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ரயிலில் அழைத்து செல்லப்படுகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து ரயிலில் வந்து காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்போரை ஒரு நாள் கும்பமேளாவில் தங்க வைத்தும், அயோத்தி ராமர் கோயிலுக்கும் அழைத்து செல்லப்படுகின்றனர்.
இந்த நிலையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்காக தென்னக பண்பாட்டு மையம் சார்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கக் கூடிய நாட்டுப்புற கலைஞர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நேற்று முன் தினம் சென்னையில் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த ரயில் நாக்பூர் அருகே சென்ற போது, அங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகள் ஏற முயற்சித்துள்ளனர்.
கதவை திறக்கும்படி வடமாநிலத்தவர்கள் பலரும் சத்தம் எழுப்பிய போது, பாதுகாப்பு கருதி தமிழக கலைஞர்கள் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் அத்துமீறி கதவில் இருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த வடமாநிலத்தவர்கள், தமிழக கலைஞர்களுடன் வாக்குவாதம் செய்ததோடு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் முயற்சித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினரிடம் தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் புகார் அளித்துள்ளனர். இருந்தாலும் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன்பின் அயோத்தியில் இருந்த வந்த ஒருங்கிணைப்பாளருக்கு தமிழக கலைஞர்கள் தகவல் கொடுத்துள்ளனர். தற்போது, அனைவரும் பாதுகாப்பாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக நாட்டுப்புற கலைஞர்கள் பேசும் போது, நேற்றிரவு 12 மணிக்கு மேல் நாக்பூர் அருகே கிராஸ் செய்த போது, வடமாநிலத்தவர்கள் கதவை உடைத்து நுழைந்தனர். அப்போது 4 நாட்டுப்புற கலைஞர்களுக்கு அடிப்பட்டுள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்கும் போது எங்களுக்கு பாதுகாப்பு அவசியம். இந்த மாதிரியான பாதுகாப்பற்ற சூழல் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications