காவிரி: தமிழகத்தில் வெடித்தது விவசாயிகள் போராட்டம்- தஞ்சையில் சாலை மறியல்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video

தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், புதுவை, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்நிலையில் காவிரி விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது.
இதில் காவிரி நீரை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு திட்டத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

விரும்பாத மத்திய அரசு
ஆனால் திட்டம் என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அது காவிரி மேலாண்மை வாரியம் என்றுதான் இருக்க வேண்டும் என்றில்லை என்று கூறும் கர்நாடக அரசு கூறுகிறது. இந்நிலையில் கர்நாடக மாநில தேர்தலுக்காக மக்களை பகைத்து கொள்ள விரும்பாத மத்திய அரசு, காவிரி மேற்பார்வை குழுவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

இன்றுடன் கெடு முடிவு
இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடு இன்றுடன் முடிவடைகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

பரபரப்பு
இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக அதே கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சாவூரில் ஆற்றுப்பாலம் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு
தமிழகத்தில் இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா என்பது குறித்து இன்று தெரியவரும்.












Click it and Unblock the Notifications