இது லிஸ்ட்லயே இல்லையே.. பிராமணர்களை குறிவைத்து கேசிஆர் வெளியிட்ட மெகா அறிவிப்பு.. பாஜக திகைப்பு
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், அம்மாநில பிராமண சமுதாய மாணவர்களின் உயர் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார். பிராமணர்களில் ஏழைகளும் உள்ளார்கள் என்றும் இதனால் பிராமணர் நலத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.100 கோடி ஒதுக்கப்படுகிறது என்றும் முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறினார்.
தெலுங்கானாவில் பாஜக அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அதனை தடுக்க அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் கடுமையான முயற்சித்து வருகிறார். ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக உள்ளதால் அந்த கட்சியுடனும் சந்திரசேகர் ராவ்வால் கூட்டணி அமைக்க முடியவில்லை. மறுபக்கம்பாஜகவும் கடுமையான நெருக்கடி தருகிறது. கடந்த சில வருடம் முன்பு ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக, கேசிஆரின் (சந்திரசேகர் ராவ்) கட்சிக்கு கடும் நெருக்கடி அளித்தது.

இதையடுத்து பாஜகவை தெலுங்கானாவில் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்து வருகிறார் சந்திரசேகர் ராவ். அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜனுடன் கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் பாஜகவிற்கு சவால் விடும் வகையில், பல்வேறு விஷயங்களை அங்கு செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் தெலுங்கானாவில் வாழும் பிராமண சமுதாய மாணவர்களின் உயர் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் கே சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் கோஹன்பல்லியில் 9 ஏக்கர் பரப்பில் ரூ.12 கோடி செலவில் பிராமண நலக்கூடம் கட்டப்பட்டிருக்கிறது. இதை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேற்று திறந்து வைத்தார். அதன்பின்னர் அங்கிருந்த மக்கள் முன்பாக பேசிய அவர், நாட்டிலேயே முதன்முதலில் இங்குதான் பிராமண சமுதாயத்துக்கான நலக்கூடம் திறக்கப்பட்டிருக்கிறது.
பிராமணர்களில் ஏழைகளும் உள்ளனர். இதனால் பிராமணர் நலத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் தெலுங்கானாவில் ரூ.100 கோடி ஒதுக்கப்படுகிறது. தெலங்கானாவில் தீப, தூப, நைவேத்திய திட்டம் மேலும் 2,696 கோயில்களுக்கு நீட்டிக்கப்படும். இக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மாத ஊதியம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.

வேத பண்டிதர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் கவுரவ நிதி ரூ.2,500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். இந்த உதவியை பெறுவதற்கான வயது வரம்பு 75-ல் இருந்து 65 ஆக குறைக்கப்படும். வேத பாடசாலை நடத்த ஆண்டுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும் தெலுங்கானா மாநில அரசால் வழங்கப்படும்.
ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் சார்ந்த படிப்புகள் படிக்கும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிராமண மாணவ, மாணவிகளுக்கான கல்விக் கட்டணத்தை இனி தெலுங்கானா அரசே ஏற்கும். பரம்பரை அர்ச்சகர்களின் பிரச்சினைகள் குறித்து, வரும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து தீர்வு காணப்படும்" இவ்வாறு முதல்வர் கே சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications