தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம்
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய மாடலும் தெலுங்கு நடிகையுமான ட்விஷா சர்மா தற்கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அவரது மாமியாரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங் இன்று சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு அம்மாநில உயர் நீதிமன்றம் அவரது முன்ஜாமீனை ரத்து செய்த அடுத்த சில மணி நேரங்களிலேயே அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
கடந்த மே 12 அன்று ட்விஷா சர்மா தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக ட்விஷா வீட்டினர் புகாரளித்த நிலையில் மே 15ம் தேதி போபால் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். வரதட்சணைக் கொடுமை காரணமாகவே இந்தக் கொலை நடந்ததாக ட்விஷா வீட்டினர் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

முன்ஜாமீன் ரத்து
மே 15ம் தேதியே போபால் கீழமை நீதிமன்றம் கிரிபாலா சிங்கிற்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது. இதனால் அவரை போலீசார் கைது செய்யவில்லை. அதேநேரம் ட்விஷாவின் கணவர் வழக்கறிஞர் சமர்த் சிங் சிபிஐ காவலில் உள்ளார். அதேநேரம் கீழமை நீதிமன்றம் கிரிபாலா சிங்கிற்கு முன்ஜாமீன் வழங்கியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி தேவநாராயண் மிஷ்ரா, நேற்றிரவு போபால் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து அதிரடித் தீர்ப்பளித்தார்.
அதிரடி
அவர் தனது உத்தரவில், "குற்றம் சாட்டப்பட்டவர் மீது தொடர்ச்சியான புகார்கள் இருப்பது, சிபிஐ விசாரணைக்கு அவர் சரிவர ஒத்துழைக்க மறுப்பது மற்றும் வழக்கின் மிகக் கடுமையான தன்மையைக் கருத்தில் கொள்ளாமல், போபால் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் ஆதாரங்களைச் சரியாக ஆராயாமல் இந்த ஜாமீனை வழங்கியுள்ளது தவறு. எனவே, புதிய பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட முன்ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது!" என்றார்.
கைது
உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே சிபிஐ அதிகாரிகள் கிரிபாலா சிங்கை கைது செய்தனர். இது தொடர்பாக ஏஎன்ஐ ஊடகத்திற்குப் பேட்டியளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை நவநிதி சர்மா, "எங்களின் நீதிக்கான போராட்டத்தில் எங்களுடன் நின்ற அனைவருக்கும் என் நன்றிகள். இந்தத் தீர்ப்பு சமூகத்திற்கு ஒரு மிகப்பெரிய நேர்மறையான செய்தியை அனுப்பியுள்ளது. தவறு செய்தவர்கள் நீதிபதியாக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்பதை நீதிமன்றம் உணர்த்தியுள்ளது.
இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து கையில் எடுத்த உச்ச நீதிமன்றத்திற்கும், தலைமை நீதிபதிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். சிபிஐ விசாரணை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது; அவர்கள் உண்மையை முழுமையாக வெளிச்சத்திற்குக் கொண்டு வருவார்கள்!" என்றார்.
யார் இவர்?
நொய்டாவைச் சேர்ந்த ட்விஷா சர்மா, மிஸ் புனே அழகி பட்டம் வென்றுள்ளார். மாடலான இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் போபாலைச் சேர்ந்த சமர்த் சிங்கிற்கும் டிசம்பர் மாதம் தான் திருமணம் நடந்தது. இருப்பினும், தொடக்கம் முதலே வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கடந்த மே 12ம் தேதி போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் ட்விஷா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications