திருப்பதி லட்டு விவகாரம்.. அவதூறு பரப்பிய நெட்டிசன்களுக்கு.. செக் வைத்த அமுல் நிறுவனம்
அகமதாபாத்: திருப்பதி கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய் அமுல் நிறுவனத்தினருடையது என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் இதுவரை நெய் விநியோகம் செய்ததே இல்லை என்று அமுல் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் அவதூறு பரப்பிய 7 எக்ஸ் தள பயனர்கள் மீது அகமதாபாத் சைபர் கிரைம் போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு கூறியுள்ளது ஆந்திர அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர். திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்திவிட்டனர் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறுத்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதம் மற்றும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையை சந்திரபாபு நாயுடு காயப்படுத்தி உள்ளார். சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்யத் தயங்கமாட்டார் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்பா ரெட்டி கூறியிருந்தார்.
குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வகம் ஒன்றுக்கு திருப்பதி ஏழுமைலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யை சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சோதனையில், லட்டில் மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்டவை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே திருப்பதி தேவஸ்தானத்துக்கு பிரபலமான அமுல் நிறுவனத்தின் நெய் பயன்படுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதுகுறித்து, அமுல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு தங்கள் நிறுவனத்தின் நெய் ஒருபோதும் விநியோகிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் இயக்குநர் ஜெகன் மேத்தா கூறுகையில், திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் பயன்படுத்தப்பட்ட நெய் அமுல் நிறுவனத்தினருடையது என்பது உண்மை அல்ல. திருப்பதி தேவஸ்தானத்துக்கு இதுவரை அமுல் நிறுவனம் சார்பில் நெய் விநியோகம் செய்யப்படவில்லை. அமுல் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக சிலர் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
அமுலை நம்பி 3.6 மில்லியன் விவசாயக் குடும்பங்கள் உள்ளன. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவது அவர்களது வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும். அமுல் நிறுவனத்தின் மீதான தவறான தகவல் பரவுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்பதற்காக தற்போது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அமுல் நிறுவனத்தின் மீது சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அகமதாபாத் சைபர் கிரைம் போலீஸிலும் அமுல் நிறுவனத்தினர் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக ஸ்பிரிட் ஆஃப் காங்கிரஸ், பஞ்சாரா1991, ராகுல்_1700 உள்ளிட்ட 7 எக்ஸ் தள பக்க பயனர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications