புடவை கட்டி பெண் வேடமிட்டு.. பிரதமர் இல்லம் நோக்கி விவசாயிகள் பேரணி.. டெல்லியில் மீண்டும் பரபரப்பு
தமிழக விவசாயிகள் 32வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி பெண் வேடமிட்டு பிரதமர் இல்லம் நோக்கி தமிழக விவசாயிகள் பேரணி செல்கின்றனர்.
டெல்லி: தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் 32வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நூதன போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று பெண் வேடமிட்டு போராடி வருகின்றனர்.
தேசிய வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் ஆதரவு
விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமின்றி வடமாநில அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெண் வேடமிட்டு..
இதனைத் தொடர்ந்து இன்று விவசாயிகள் அனைவரும் பெண் வேடமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 7000 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் வரை போராடுவோம் என்று கூறியுள்ளனர்.

பிரதமர் இல்லம் நோக்கி..
புடவை கட்டி பெண் வேடமிட்டுள்ள விவசாயிகள் பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்கள் போராடிக் கொண்டிருக்கும் ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து புடவைக் கட்டிக் கொண்டிருக்கும் விவசாயிகள் ஊர்வலமாக பிரதமர் இல்லம் நோக்கிச் சென்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர்.

பேச்சுவார்த்தை
இந்நிலையில், போலீசார் விவசாயி அய்யாகண்ணுவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பிரதமர் அலுவலகம் நோக்கி செல்லக் கூடாது என்றும் அப்படி சென்றால் கைது செய்வோம் என்றும் டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.

போலீசார் தடுப்பு
விவசாயிகள் போராடும் இடத்தில் போடப்பட்டுள்ள தடுப்புகளை தாண்டி செல்லக் கூடாது என்று ஏற்கனவே டெல்லி போலீசார் விவசாயிகளிடம் இருந்து கையெழுத்து வாங்கியுள்ள நிலையில், அவர்கள் அதனை மீறிச் செல்வதற்கு போலீசார் தொடர்ந்து அனுமதியை மறுத்து வருகின்றனர். என்றாலும் தாங்கள் முன் வைத்த காலை பின் வைக்கப் போவதில்லை என்று கூறி விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications