மருத்துவர் கொலை.. சோஷியல் மீடியாவை கையில் எடுத்த பாஜக! ஆட்சியை கவிழ்க்க சதி.. திரிணாமுல் காங். சாடல்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து அம்மாநிலத்தில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால், இந்த போராட்டங்கள் தங்களது ஆட்சியை அகற்றுவதற்காக பாஜகவால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என திரிணாமுல் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி பெண் பயிற்சி மருத்துவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்று கூறியுள்ளனர். இது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை தீவிர விசாரணையை மேற்கொண்டது.

இதில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கூறி மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அதேநேரம் இந்த வழக்கு நியாயமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று, உயிரிழந்த மருத்துவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவரின் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த கொலை சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்த மருத்துவருக்காக நீதி கேட்டும் மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராடி வருகின்றனர். கடந்த 9 நாட்களாக நடந்து வரும் போராட்டம் காரணமாக மேற்கு வங்கத்தின் மருத்துவத்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவை தவிர வேறு எந்த பணியிலும் ஈடுபடமாட்டோம் என்று மருத்துவர்கள் ஸ்டிரைக் செய்தனர். போராட்டம் காரணமாக இதுவரை நோயாளிகளில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இப்படி இருக்கையில் கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து கடந்த 17ம் தேதி நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்குவங்கம், டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு என பல மாநிலங்களில் நடந்த மருத்துவர்களின் போராட்டம் நோயாளிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது.
அதேபோல கொலை சம்பவம் குறித்து, சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையில், "மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை என்றும், இதனால்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சம்பவம் நடந்த பகுதியை புனரமைத்து வருகின்றனர். இது ஆதாரங்களை அழிப்பது போன்றதாகும். அதேபோல மேற்குவங்க காவல்துறை குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கிறது" என்று ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
ஆணையத்தின் உறுப்பினர் டெலினா கோண்ட்குப் மற்றும் மேற்கு வங்க மாநில சட்ட சேவைகள் ஆணையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சோமா சவுத்ரி ஆகியோர் தலைமையில் இந்த விசாரணை நடத்தப்பட்டிருந்தது. மறுபுறம் பத்ம விருதுகளை பெற்ற மருத்துவர்கள், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கையாள்வதற்கான சிறப்புச் சட்டத்தை விரைவாக இயற்றவும், மருத்துவ வசதிகளில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை அமல்படுத்தவும் கோரியுள்ளனர்.
இப்படி இருக்கையில், தங்களது அரசை கவிழ்க்க பாஜக சதி செய்திருப்பதாகவும், போராட்டக்காரர்களுக்கு பதில் தனது கட்சிக்காரர்களை பொது போராட்டத்தில் பாஜக களமிறக்கியுள்ளது என்றும் திரிணாமுல் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அக்கட்சியின் ராஜ்யசபா எம்பியும், செய்தி தொடர்பாளருமான கோகலே கூறுகையில், "மேற்கு வங்கத்தில் பாஜக ஒரு மோசமான பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதுதான் அது. இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பிரசாரமாக பாஜக நடத்தி வருகிறது. வழக்கு விசாரணை பாஜக வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், வழக்கு குறித்து இதுவரை எந்த அப்டேட்டும் வழங்கப்படவில்லை.
விசாரணை ஏன் வேகமாக நடக்கவில்லை? உண்மை குற்றவாளிகள் எப்போது கைது செய்யப்படுவார்கள்? என்று கேட்காமல், சிபிஐக்கு எதிராக போராட்டம் நடத்தாமல் திரிணாமுல் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது. சோஷியல் மீடியாக்களில் மமதா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற ஹாஷ் டேக் டிரெண்ட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஹாஷ் டேக் உடன் கடந்த நான்கு நாட்களில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் இடப்பட்டிருக்கின்றன. ஆனால் விஷயம் என்னவெனில் உண்மையான போராட்டக்காரர்கள் இந்த ஹாஷ் டேக்-ஐ பயன்படுத்தவில்லை என்பதுதான்.
அதேபோல இந்த ஹாஷ் டேக்-ஐ பயன்படுத்தி கணக்குகளை எடுத்து பார்த்தால், அதில் 45% அக்கவுண்டுகள் அமெரிக்கா, ரஷ்யா, எரித்திரியா, நைஜீரியா, கொலம்பியா மற்றும் சுரினாம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவையாக இருக்கிறது" என்று புள்ளிவிவரங்களுடன் தகவல்களை பகிர்ந்து விமர்சித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications