திரிபுராவில் ஆட்சி அமைத்தாலும் பாஜகவுக்கு பெரிய அடி! செக் வைத்த டிஎம்பி! சாதித்த அரச குடும்ப வாரிசு
திரிபுரா அரசியலில் அரச குடும்பத்தைச் சேர்ந்த டெப் பர்மாவின் கட்சி தேர்தலில் அனைவரும் கவனிக்கும் கட்சியாக மாறியுள்ளது.
கவுஹாத்தி: திரிபுரா சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், அனைவரின் கவனமும் திப்ரா மோதா கட்சி பக்கம் சென்றுள்ளது. அங்கு மன்னர் குடும்ப வாரிசு அனைவரையும் கவனிக்க வைத்துள்ளார்.
இந்தாண்டு மட்டும் மொத்தம் 9 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவே ஆட்சியில் உள்ளது. இதனால் எப்படியாவது தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பாஜக இறங்குகிறது.
இப்போது வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்தில் தேர்தல் முடிந்துள்ளது. மூன்று வடகிழக்கு மாநிலங்களிலும் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக இறங்கியது.

திரிபுரா தேர்தல்
இதில் திரிபுரா மாநில தேர்தல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அங்கு மொத்தம் 60 இடங்கள் இருக்கும் நிலையில், கடந்த தேர்தலில் பாஜக கூட்டணி 36 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. பல ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் இருந்த சிபிஎம் வெறும் 16 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. 5 ஆண்டுகள் கழித்து இப்போது அங்குத் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், பாஜக மீண்டும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பிடிக்கவுள்ளது. அங்கு 30+ இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது.

டெப் பர்மா
இது மட்டுமின்றி, திரிபுரா தேர்தலில் திப்ரா மோதா கட்சியின் (டிஎம்பி) பலரது கவனத்தையும் ஈர்த்து. பழங்குடியின் சமூகத்தினருக்குத் தனி மாநிலமான 'கிரேட்டர் திப்ராலாந்து' கோரி வரும் பிரத்யோத் பிக்ரம் மாணிக்ய டெப் பர்மா கடந்த 2018இல் இந்த டிஎம்பி கட்சியைத் தொடங்கினார். காங்கிரஸில் இருந்த இவர், அதில் இருந்து விலகி இக்கட்சியைத் தொடங்கினார். அங்குள்ள ராஜ குடும்ப வாரிசான இப்போது மக்கள் மன்றத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்க இறங்கினார்.

பழங்குடியினர்
இப்போது திரிபுராவில் சுமார் 32% பேர் பழங்குடியினராக இருக்கிறார்கள்.. அதேபோல வங்காள அகதிகளும் அங்கு அதிகம் உள்ளனர். வங்காள அகதிகளால் பழங்குடியினரின் உரிமைகள் பறிக்கப்படுவதாக முன்வைத்து இவர் பிரசாரம் செய்தார். குறிப்பாகப் பழங்குடியினர் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் 20 தொகுதிகளைக் குறிவைத்து அவர் தீவிர பிரசாரத்தில் இறங்கினார். இதற்கு நல்ல ரெஸ்பான்ஸும் கிடைத்தது. அங்குள்ள பழங்குடியினர் இவரை அன்புடன் 'புபக்ரா' என்றே அழைத்தார்கள்.

ஏன் முக்கியம்
கடந்த 2021இல் திரிபுரா பழங்குடி கவுன்சில் தேர்தலில் ஆளும் பாஜகவை டிஎம்பி தோற்கடித்தது. இதுவே அவர்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கக் காரணமாக இருந்தது. அங்கு டிஎம்பி கட்சி 60 இடங்களில் 42 இடங்களில் போட்டியிட்டது. இதில் 20 தொகுதிகளில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளாகும். டிஎம்பி கட்சி தலைவர் டெப் பர்மா இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்ற போதிலும், அனைவரையும் கவரும் வகையிலேயே பிரசாரம் செய்தார் அவரது பிரசாரங்களில் மிக பெரியளவில் மக்கள் கூட்டம் வந்தது. இதனால் திரிபுராவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அவர் கிங் மேக்கராக மாறுவார் என்று கூறப்பட்டது.

ஒத்துவரவில்லை
அங்குள்ள பழங்குடியினர் பகுதிகளில் இது வலுவான அரசியல் சக்தியாகப் பார்க்கப்படுகிறது. முதலில் அவர்களுடன் கூட்டணி அமைக்கவே பாஜக முயன்றது. இருப்பினும், தனி மாநில கோரிக்கையில் டெப் பர்மா உறுதியாக இருந்ததால், பாஜக ஒதுங்கிவிட்டது. இதையடுத்து பழங்குடியினருக்குத் தனி மாநிலம் என்ற கோரிக்கை ஆபத்தானது என்பதை முன்னிறுத்தி பாஜக பிரசாரம் செய்தது. அது திரிபுராவில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்கள் இடையே மோதலை ஏற்படுத்தும் என்றும் பிரசாரம் செய்தது.. இதை அடியோடு மறுத்த டிஎம்பி ஆதரவாளர்கள், தங்கள் மன்னர் வகுப்புவாதி இல்லை என்றும் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பழங்குடியினர் அல்லாதோர் என்று அனைவரையும் அழைத்துச் செல்கிறார் என்று கூறி பதிலடி கொடுத்தனர்.

பெரிய அடி
இதில் 42 இடங்களில் போட்டியிடும் போதிலும்.. டிஎம்பி கட்சியால் தனித்து ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது தெரிந்ததே.. அதேநேரம் மாநிலத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைந்தால். ஆட்சியைத் தீர்மானிக்கும் கிங் மேக்கராக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தற்போது இருக்கும் டிரெண்டை வைத்துப் பார்க்கும் போது, அவர்களுக்கு டிஎம்பி ஆதரவு தேவைப்படாது என்றே தெரிகிறது. டெப் பர்மா கிங் மேக்கராக மாறவில்லை என்றாலும் கூட பாஜகவுக்குப் பழங்குடியினர் தொகுதியில் பெரிய அடி விழ இவரே காரணமாக இருக்கிறார். கடந்த முறை பழங்குடியினர் தொகுதியில் 8ஐ பாஜக கைப்பற்றிய நிலையில், இப்போது ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அவர்கள் முன்னிலையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications