டிடிவி.தினகரன் கற்பனை கோட்டையில் மிதந்து வருகிறார் - கேபி.முனுசாமி சரமாரி சாடல்
டிடிவி.தினகரன் ஆர்கே.நகர் தேர்தலில் ஜெயித்து விடலாம் என கற்பனை கோட்டையில் மிதந்து வருவதாக கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி: டிடிவி.தினகரன் ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என கற்பனை கோட்டையில் மிதந்து வருவதாக கேபி.முனுசாமி சாடியுள்ளார். அவர் டெபாசிட் வாங்கிவிட்டால் அதுவே தினகரனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
ஆர்கே.நகரில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் இதில் திமுக, அதிமுக அம்மா கட்சி, அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சி, பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருப்பதையும், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு உள்ளிட்டவற்றை சாதகமாக்கி வெற்றி பெற அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் டிடிவி.தினகரனின் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக திமுக உட்பட அனைத்துக்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

ஓபிஎஸ் அணி புகார்
இந்நிலையில் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு டிடிவி தினகரன் அணியினர் பணம் மட்டுமின்றி தங்கம், வெள்ளி, பரிசு பொருட்கள் என கொடுத்து வருகின்றனர் என டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து ஓ.பி.எஸ். அணியினர் நேற்று புகார் அளித்தனர். மைத்ரேயன் எம்பி தலைமையில் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் புகார் அளித்தனர்.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
அப்போது அவர்கள் சசிகலா அணியினர் ஆர்.கே.நகரில் செய்யும் விதிமீறல்கள் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினர். இந்த சந்திப்புக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

கற்பனை கோட்டையில் மிதக்கிறார்
அவர் கூறியதாவது, "மதுசூதனன் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர். அரசியலில் ஒழுக்கம் முக்கியம். ஆனால், ஜெயலலிதா பெயரை கூறி , தினகரன் கற்பனை கோட்டையில் மிதந்து வருகிறார்.

டெபாசிட் வாங்கினாலே வெற்றி
ஆதாயத்துக்காக பல ஏமாற்று வார்த்தைகளை மக்களிடம் கூறி வருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் டெபாசிட் வாங்க மட்டுமே பிரசாரம் நடத்தி வருகிறார். ஒருவேளை அவர் டெபாசிட் வாங்கிவிட்டால் அதுவே அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி" இவ்வாறு கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications