எரித்துக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம்- அரசு வேலை.. உ.பி.அரசு உத்தரவு..
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளரின் குடும்பத்துக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணமும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு அரசு வேலையும் வழங்க அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூரைச் சேர்ந்தவர் ஜகேந்திர சிங். இவர் ஆளும் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைசசர் ராம் மூர்த்தி வர்மாவைப் பற்றி ஃபேஸ்புக்கில் தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.

ராம் மூர்த்தி சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் செய்வது, நிலத்தை அபகரிப்பது உள்ளிட்டவை பற்றி அவர் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டு வந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராம் மூர்த்தி, ஜகேந்திரா மீது போலீசில் பொய் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் ஜகேந்திராவை கைது செய்ய சதார் பஜார் பகுதியில் உள்ள ஆவாஸ் விகாஸ் காலனியில் இருக்கும் அவரது வீட்டுக்கு கடந்த 1-ம்தேதி சென்றனர்.
அங்கு போலீஸ் அதிகாரி ஒருவர் ஜகேந்திரா மீது தீ வைத்து எரித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். போலீசாரோ தாங்கள் கைது செய்ய சென்ற இடத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜகேந்திரா கடந்த 8-ம் தேதி மரணம் அடைந்தார்.
மரணம் அடைவதற்கு முன்னர் அவர் அளித்த வாக்குமூலம் ஊடகங்களில் வெளியானதால் இதையறிந்த சமூக ஆர்வலர்கள் கொந்தளித்தனர். ஆளும் கட்சி அமைச்சராக ராம் மூர்த்தி வர்மா போலீசாரை ஏவிவிட்டு ஜகேந்திராவை உயிருடன் எரித்துக் கொலை செய்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொல்லப்பட்டவரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் எதிர்கட்சியினர் போராடி வந்தனர்.
இதே கருத்தை வலியுறுத்தி ஜிகேந்திராவின் உறவினர்களும் முதலமைச்சர் அகிலேஷ் யாதவை சந்திக்க தேதி கேட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று அவரது குடும்பத்தாரை அகிலேஷ் யாதவ் சந்தித்தார். பின்னர் அவர்களுக்கு ரூ.30 லட்சம், அந்த குடும்பத்தைச் சேர்ந்த இரு வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த கொலை வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையையும் நிறைவேற்றுவதாக அகிலேஷ் யாதவ் உறுதி அளித்துள்ளார் என உத்தரப்பிரதேச மாநில அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவையடுத்து, அரசுக்கு எதிராக நடத்திவந்த போராட்டத்தை கைவிடுவதாக ஜிகேந்திராவின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications