ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் மோடி “ரோட்ஷோ”.. இன்று குஜராத்தே கலர்புல்லா இருக்கப்போகுது! என்ன மேட்டர்?
காந்திநகர்: இன்று இந்தியா வரும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜெய்த் அல் நஹ்யான் குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சாலை வழி ஊர்வலம் செல்கிறார்.
குஜராத்தில் நடைபெற உள்ள வைப்ரண்ட் குஜராத் உலக மாநாட்டின் திறப்பு விழாவை தொடங்கி வைப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது இந்தியா வருகிறார். குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடையும் அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கிறார். அதை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமதுடன் பிரதமர் நரேந்திர மோடி சாலையில் திறந்தவெளி வாகனத்தில் மக்களை சந்தித்தபடி ஊர்வலமாக செல்கிறார்கள்.

சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் மக்களை சந்தித்தபடி இரு நாட்டு தலைவர்களும் ஊர்வலமாக செல்ல இருக்கிறார்கள். இன்று பிற்பகல் பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகங்கள் அதிபரை விமான நிலையத்தில் வரவேற்ற பிறகு இந்த ஊர்வலம் தொடங்கும் என்று அகமதாபாத் கிழக்கு போக்குவரத்து காவல் துறை துணை ஆணையர் சஃபின் ஹசன் தெரிவித்து உள்ளார்.
"குஜராத் தலைநகர் காந்திநகருடன் இணைக்கும் இந்திரா பாலத்தில் இந்த ஊர்வலம் நிறைவடையும் என்றும் அதன் பின்னர் பால வட்டத்திலிருந்து, இரு நாட்டு தலைவர்களும் காந்திநகரில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு தனித்தனியாக செல்ல உள்ளார்கள் என்றும் இதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை துணை ஆணையர் தெரிவித்து இருக்கிறார்.
குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் மாநாட்டு மையத்தில், நாளை நடைபெற உள்ள 10 வது வைபரண்ட் குஜராத் மாநாட்டை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். இதற்காக குஜராத் மாநிலத்திற்கு ஜனவரி 8 ஆம் தேதி முதல் ஜனவரி 10 ஆம் தேதி வரை பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளது.
நாளை காலை சுமார் 9.30 மணிக்கு, குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் மாநாட்டு மையத்திற்கு செல்லும் மோடி, அங்கு உலக தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும், முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடனான கூட்டத்தில் பங்கெடுக்கிறார். மதியம் 3 மணியளவில் வைபரண்ட் குஜராத் உலகளாவிய வர்த்தக கண்காட்சியை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். மாலை 5.15 மணியளவில் GIFT நகருக்கு செல்லும் மோடி அங்கு FinTech தலைமைத்துவ மன்றத்தில் முக்கிய வணிகத் தலைவர்களுடன் கலந்துரையாட உள்ளார். இந்த மாநாட்டில் 34 நாடுகளும், 16 நிறுவனங்களும் பங்குதாரர்களாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications