விண்ணை முட்டும் பெட்ரோல் விலை.. மாநில அரசுகளே காரணம்.. புது விளக்கம் தரும் பெட்ரோலிய துறை அமைச்சர்
கொல்கத்தா: ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களைக் கொண்டு வர மாநில அரசுகள் விரும்பாததாலேயே நாட்டில் பெட்ரோல் விலை குறையவில்லை என்று பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இருப்பினும், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றி இருந்ததால், 3ஆவது முறையாக மம்தா மேற்கு வங்க முதல்வராகப் பதவியேற்றார். அவர் அடுத்த ஆறு மாதங்களில் சட்டசபை உறுப்பினராக வேண்டும் என்பதால் பபானிபூரில் வெற்றி பெற்ற திரிணாமுல் வேட்பாளர் ராஜினாமா செய்தார்.

என்ன காரணம்
வரும் செப். 30ஆம் தேதி பபானிபூர் தொகுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் என்பவர் களமிறங்குகிறார். இந்நிலையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் பூரி அங்குப் பிரசாரம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெட்ரோல் விலை குறையுமா என்றால் கண்டிப்பாகக் குறையும். இப்போது மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வர விரும்பவில்லை. அதனால் தான் பெட்ரோலிய பொருட்கள் விலை இப்போது குறையவில்லை.

வரி ஏன்
மத்திய அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு 32 ரூபாய் வரியாக வசூலிக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 19 டாலராக இருந்தபோது வசூலித்த லிட்டருக்கு ₹ 32 வசூலித்தோம். இப்போது கச்சா எண்ணெய் விலை 75 டாலராக உயர்ந்தபோதும், அதே தொகையைத் தான் நாங்கள் வசூலிக்கிறோம். இப்படி வசூலிக்கும் தொகை மூலமே நாங்கள் பொதுமக்களுக்கு இலவச ரேஷன், இலவச வீட்டுவசதி உள்ளிட்ட பல திட்டங்களை மக்களுக்கு வழங்குகிறோம்.

திரிணாமுல் அரசு
மேற்கு வங்கத்தில் மத்திய மாநில அரசுகள் இணைந்து மொத்தமாக பெட்ரோல் மீது 40% வரி வசூலிக்கப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கடந்த ஜூலை மாதம் முதல் பெட்ரோல் மீதான வரியை 3.51 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இந்த தொகையை உயர்த்தவில்லை என்றால் பெட்ரோல் விலை மேற்கு வங்கத்தில் 100ஐ கடந்திருக்காது" என்று அவர் தெரிவித்தார்.

பபானிபூர் இடைத்தேர்தல்
தொடர்ந்து பபானிபூர் இடைத்தேர்தல் குறித்துப் பேசிய அவர், "பபானிபூர் இடைத்தேர்தலில் தங்களுக்கு வெற்றி உறுதி என திரிணாமுல் கூறுகிறார்கள். பிறகு ஏன் ஒட்டுமொத்த அமைச்சரவையும் இங்குப் பரப்புரை செய்கிறது? இந்தத் தேர்தலில் எங்களுக்குக் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என உறுதியாக நம்புகிறோம், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை இந்த வாக்கெடுப்பில் ஒரு முக்கிய பிரச்சினை இருக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.

பஞ்சாப் விவகாரம்
மேலும், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்துப் பேசிய அவர், "இது காங்கிரசின் இறுதிக்கட்ட சரிவையே பிரதிபலிக்கிறது. இதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்தே தான் நான் கூறுகிறேன். மேற்கு வங்கத்தில், அவர்கள் மேற்கு வங்கத்தில் யாருடன் கைகோர்த்துத் தேர்தலை எதிர்கொண்டார்களோ, அவர்களை எதிர்த்து கேரளாவில் களமிறங்கினர். எவ்வித திட்டமும் இன்றி அவர்கள் செயல்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சி வளர்ந்த உ.பி.யில் கூட இப்போது அவர்களுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை." என்றார்.

சிஏஏ தேவை
ஆப்கன் விவகாரம் மற்றும் சிஏஏ சட்டம் குறித்துப் பேசிய ஹர்தீப் சிங் பூரி, "ஆப்கானிஸ்தான் விவகாரம் சிஏஏ ஏன் தேவை என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. அண்டை நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மை சமூகத்தினர் எதிர்கொள்ளும் சவாலான சூழ்நிலையைக் கருதியே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. சிஏஏ-இன் கட்ஆப் தேதி 2014ஆக உள்ளது. ஒரு காலத்தில் சிஏஏ-ஐ எதிர்த்தவர்கள், இப்போது கட்ஆப் தேதியை 2021ஆக நீட்டிக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள். சிஏஏ என்பது துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு உதவும் ஒரு சட்டம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications