பாம்புக்கு ‘லிப் கிஸ்’ கொடுத்த போதை விவசாயி - நாக்கிலேயே கடித்ததால் ஏற்பட்ட சோகம்
லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு புகுந்துள்ளது. உள்ளூர் விவசாயி ஒருவர் சென்று அந்த பாம்பை மீட்டுள்ளார். உடனடியாக அதை காட்டுக்குள் விடாமல் அவர் போதையில் பாம்பை கழுத்தில் போட்டு, முத்தம் கொடுக்க முயற்சி செய்தார். அப்போது அவரின் நாக்கை பாம்பு கடித்த காரணத்தால், தற்போது அந்த நபர் உயிருக்கு போராடி வருகிறார்.
பாம்பு என்றால் படையும் நடங்கும் என்பது பழமொழி. வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் அவ்வப்போது பாம்பு வருவது வழக்கம் தான். அப்படி பாம்புகள் வரும்போது பாம்பு பிடி வீரர்களுக்கோ, தீயணைப்புத்துறை அல்லது வனத்துறைக்கோ தகவல் கொடுத்து பாம்பை பிடிப்பார்கள். சில மக்கள் அவர்களாகவே பாம்புகளை பிடிப்பது அல்லது அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

சமீபகாலமாக பாம்புகளை பிடிக்கும்போது அதனுடன் போட்டோ மற்றும் ரீல்ஸ் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிடுவதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். பாம்புகளுடன் வித விதமாக போஸ் எடுத்து தங்களை வீர தீர சூரர்களாக காட்டிக் கொள்வதற்கு சாகசம் செய்து வருகிறார்கள். இதனால் பாம்புகள் கடித்து உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், அம்ரோஹா மாவட்டம், ஹைபத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் (வயது 50). அந்த கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் பாம்பு வந்தால், அதை மீட்பதற்கு ஜிதேந்திரகுமாரை அழைப்பது வழக்கம். அப்படி கடந்த வெள்ளிக்கிழமை குடியிருப்புப் பகுதிக்குள் ஒரு விஷப்பாம்பு நுழைந்ததாக தகவல் கொடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் ஜிதேந்திரகுமார் சம்பவ இடத்துக்கு சென்று பாம்பையும் மீட்டுவிட்டார். ஜிதேந்திர குமாரும் பாம்புகளை மீட்கும்போதே போட்டோ மற்றும் ரீல்ஸ்க்காக சாகசம் செய்து வருகிறார். அன்றைய தினம் பாம்பை பிடித்துவிட்டு, அதை உடனடியாக காட்டுப் பகுதிக்குள் விடவில்லை. ஊர் மக்கள் சுற்றி இருந்ததால் அவர்கள் முன்பு சாகசம் காட்டியுள்ளார்.
பாம்பை கழுத்தில் போட்டு, அதன் தலைப் பகுதியை கையில் பிடித்து சாகசம் செய்துள்ளார். அங்கிருந்த மக்களும் ஆரவாரம் செய்ய ஜிதேந்திரகுமாரின் தொடர்ந்து சாகசம் செய்துள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்துள்ளார். மேலும் ஒரு கையில் சிகரெட் புகைத்தபடி மறு கையில் பாம்பை கையாண்டுள்ளார்.
போதையில் தன்னிலை மறந்து பாம்புடன் சாகசத்தில் ஈடுபட்டிருந்தார். இதை அங்கிருந்த மக்கள் வீடியோவும் எடுத்துக் கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் அவர் பாம்புக்கு முத்தம் கொடுக்க முயற்சி செய்தார். அப்போது அவர் பாம்பிடம் நாக்கையும் நீட்டவே.. திடீரென்று பாம்பு நாக்கில் கடித்து விட்டது. இதைப் பார்த்து பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பயத்தில் அவர் உடனே பாம்பை கீழே போட, பாம்பு அருகில் உள்ள புதருக்குள் சென்றுவிட்டது. ஆனால் பாம்பு கடித்தவுடன் ஜிதேந்திரகுமாரின் உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக அவர் அருகில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மொரடாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு விவசாயி உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. போதையில் தன்னிலை மறந்து ரீல்ஸ் மோகத்தில் மூழ்கியதால் விவசாயி ஒருவர் உயிருக்கு போராடுவது உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications