சுற்றுலா பயணிபோல.. இரவு முழுவதும் ஆட்டோவில் பயணம்.. உ.பி.யை கலக்கிய பெண் போலீஸ் சிங்கம்
ஆக்ரா: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது. அதை சரி செய்வதற்காக ஒரு பெண் போலீஸ் ஆக்சனில் இறங்கியுள்ளார். பெண்களின் பாதுகாப்பை சோதனை செய்வதற்காக, அவர் இரவு மப்டியில் சுற்றுலா பயணி போல ஆட்டோவில் பயணித்துள்ளார். இதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பெண்களுக்கான பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது. இந்தப் பிரச்னையில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதை சரி செய்யும் வகையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பெண் போலீஸ் தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ரா போலீஸ் உதவி கமிஷனராக இருப்பவர் சுகன்யா ஷர்மா. இவர் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக, இரவு முழுவதும் செய்த ஒரு அண்டர் கவர் ஆபரேஷனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மப்டி கெட்டப்பில், இரவு முழுவதும் தனியாக ஆட்டோவில் பயணித்துள்ளார் அவர்.
33 வயதான சுகன்யா ஷர்மா, சுற்றுலா பயணி போல ஆட்டோவில் பயணித்து, பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக சோதனை செய்துள்ளார். முதலில் ஆக்ரா ரயில் நிலையம் முன்பு சென்ற அவர், அங்கிருந்து காவல்துறை உதவி எண்ணுக்கு அழைத்துள்ளார். அப்போது, "இந்தப் பகுதியில் நான் மட்டும் தான் இருக்கிறேன். எனக்கு பாதுகாப்பாக தெரியவில்லை. உங்கள் உதவி தேவை." என்று சொல்லியுள்ளார்.
அதற்கு எதிரில் பேசியவர்கள், "அங்கேயே காத்திருங்கள். உங்கள் லொகேஷனை டிராக் செய்து வருகிறோம்." என்று கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் ரோந்துப் பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் சுகன்யாவுக்கு தொடர்பு கொண்டு, "நாங்கள் அங்குதான் வந்து கொண்டிருக்கிறோம்." என்று சொல்லியுள்ளனர். இதையடுத்து சுகன்யா, உண்மையை சொல்லி, பணிகள் எப்படி நடக்கிறது என்று சோதனை செய்வதாக கூறியிருக்கிறார்.

மேலும் ஆட்டோவில் பயணிக்கும்போது, அந்த ஆட்டோ டிரைவரிடம் பெண்கள் பாதுகாப்பு குறித்து கேட்டுள்ளார். ஆட்டோ டிரைவர் முதலில் அவர் சுற்றுலா பயணி தானே என்று சீருடை அணியாமல் இருந்துள்ளார். பிறகு சுகன்யா போலீஸ் என தெரிந்தவுடன் அவர் அவசர அவசரமாக சீருடை எடுத்து அணிந்துள்ளார். கூட்டம் அதிகமுள்ள முக்கியமான பகுதியில் ஆய்வு செய்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்து சமூகவலைதளங்களில், "பெண்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்படும் முதல் நடவடிக்கை இது. அனைத்து போலீஸ்களும் இதை தினசரி செய்ய வேண்டும். சராசரி பொது மக்களாக ஆய்வு செய்தால் தான், பொது மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியும். முக்கியமாக இரவு நேரங்களில் ஆய்வு செய்வது மிகவும் அவசியம். சுகன்யா ஷர்மா சிறப்பான பணியை செய்துள்ளார்." என்று பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications