"பலாத்கார சட்டம்.." சில பெண்கள் ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்துகின்றனர்! ஐகோர்ட் நீதிபதி கருத்து
டேராடூன்: ஆண் பாட்னருடன் கருத்து வேறுபாடு ஏற்படும் சமயத்தில் பெண்கள் சிலர் பலாத்கார சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதாக உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை அதிகமாகவே இருக்கிறது. பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் அவர்களைப் பாதுகாக்கவும் நமது நாட்டில் ஏகப்பட்ட சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தச் சட்டங்களை சில பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனிடையே இந்த விவகாரத்தில் உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளது.

நீதிமன்றம்: உத்தரகண்ட் மாநிலத்தில் வசிக்கும் ஒரு ஜோடி காதலித்து வந்துள்ளனர். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் அவர்கள் பரஸ்பர சம்மதத்துடன் உறவில் இருந்து வந்துள்ளனர். அதன் பிறகு அவர்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த இளைஞன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்த நிலையில், அந்த பெண் பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார்.
இந்த வழக்கை ரத்து செய்யுமாறு அவர் உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஷரத் குமார் ஷர்மா விசாரித்தார். கடந்த ஜூலை 5ஆம் தேதி இந்த எப்ஐஆரை ரத்து செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த கருத்தைத் தெரிவித்தார்.
தவறாகப் பயன்படுத்துகிறார்கள்: ஒருவர் திருமணம் செய்ய மறுப்பதால் மட்டுமே.. வயது வந்தோர் இடையே பரஸ்பர சம்மதத்துடன் நடந்த உடலுறவைப் பலாத்காரமாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியதை நீதிபதி ஷரத் குமார் சுட்டிக் காட்டினார்.
கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரச்சினை ஏற்படும் நேரத்தில், பெண்கள் பலரும் இந்திய தண்டனைச் சட்டத்தின் ஐபிசி 376ஐ, ஆண்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் உத்தரகண்ட் உயர் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டார்.
புகார் என்ன: இந்த வழக்கைப் பொறுத்தவரைக் குற்றம் சாட்டப்பட்டவர் தன்னுடன் 2005 ஆம் ஆண்டிலிருந்து ஒருமித்த சம்மதத்துடன் உறவில் இருந்தாக அந்த பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இருவரில் யாருக்காவது வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக இருவரும் பேசி வைத்துள்ளனர். இருப்பினும், அந்த நபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
அந்த ஆண் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட பிறகும் கூட இருவரும் உறவில் இருந்துள்ளனர். அதன் பிறகு 2020 ஜூன் 30ஆம் தேதி தான் அந்த பெண் இந்த புகாரை அளித்துள்ளார்.
நீதிமன்றம் கருத்து: உயர் நீதிமன்ற நீதிபதி மேலும் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்த பின்னரும் அந்த பெண் தானாக முன்வந்து உறவைத் தொடர்ந்துள்ளார். இந்த இடத்தில் அவரது சம்மதம் முக்கியத்துவம் பெறுகிறது. பரஸ்பர சம்மதத்துடன் உறவில் நுழைந்து ஏமாற்றுவதாகத் தரப்படும் புகார் என்பது ஒரு உறவின் தொடக்கத்தில் தான் பொருந்தும்.
15 ஆண்டுகளாக உறவில் இருந்து.. அவர் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார் என்பதைத் தெரிந்த பின்னரும் உறவில் தொடர்வதால் இந்த இடத்தில் நம்மால் இதைக் கருத்தில் கொள்ள முடியாது" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications