ஓஹோ.. வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் 8 சிறுத்தைகள்.. 1000 உள்ளூர் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
போபால்: தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் இருந்து 8 சீட்டாக்கள் பிரதமர் மோடியின் பிறந்தநாளான வருகிற 17-ம் தேதி கொண்டுவரப்பட உள்ள நிலையில், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றித்திரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உலகிலேயே வேகமாக ஓடக்கூடிய விலங்கினமான சீட்டா (சிவிங்கி புலிகள்) இந்தியாவில் ஒரு காலத்தில் அதிக அளவில் இருந்தன.
ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி செய்த மன்னர்கள், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் உள்ளிட்டோர் பொழுதுபோக்குக்காக சீட்டாக்களை வேட்டையாடினர்.

நமீபியா நாட்டுடன் ஒப்பந்தம்
இதனால், இந்தியாவில் சீட்டாக்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கியது. இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்படாத மாநிலமாக இருந்த சத்தீஷ்கரில் கடந்த 1947-ம் ஆண்டு ஒரு சீட்டா தென்பட்டது. அதன்பிறகு 1952-ல் சீட்டா இந்தியாவில் எங்கும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. தற்போது வரை சீட்டா வகை புலிகள் இந்தியாவின் எந்த பகுதியிலும் இல்லை. எனவே இந்தக் குறையை போக்குவதற்கு திட்டமிட்ட இந்தியா இதற்காக நமீபியாவிடம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

8 சீட்டாக்கள் கொண்டுவரப்படுகிறது
இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியாவுக்கு 5 ஆண் சீட்டாக்கள் மற்றும் 3 பெண் சீட்டாக்கள் கொண்டு வரப்பட உள்ளன. இதனால், இந்திய மண்ணில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு பிறகு சீட்டாக்கள் கம்பீர நடை போட இருக்கின்றன. மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவுக்கு இந்த சீட்டாக்கள் அடுத்த வாரம் கொண்டு வரப்பட உள்ளன. இந்தியக் காடுகளில் சீட்டாவை அறிமுகப்படுத்தும் திட்டத்தை வரும் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

நாய்களுக்கு தடுப்பூசி
பிரதமர் மோடிக்கு அன்றைய தினம்தான் பிறந்த நாளாகும் என்பது கவனிக்கத்தக்கது. சீட்டாக்கள் விடப்படுவதை முன்னிட்டு குனோ தேசிய பூங்காக்களை சுற்றிலும் 5 கி.மீட்டர் தொலைவுக்குள் சுற்றித்திரியும் தெருநாய்கள் மற்றும் நாட்டு நாய்கள் என சுமா 1,000 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ரேபிஸ் வைரஸ் பாதிப்பில் இருந்து சீட்டாக்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவே முதல் முறை
மேலும், சீட்டாக்கள் நாய்களை கடித்து விடும் என்பதற்காக தடுப்பூசி போடப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ள வனத்துறை அதிகாரிகள், இந்தியாவில் இதுபோல நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுவது இதுவே முதல் முறையாகும் என்றும் தெரிவித்தனர். இது குறித்து வனத்துறை அதிகாரி வெர்மா கூறியதாவது:- ''பொதுவாக சிறுத்தைகள் ஒரு விலங்கை வேட்டையாடி கொன்றுவிட்டு ஒரு பகுதியை விழுங்கும். மிச்சம் உள்ள பகுதிகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடும்.

ரேபிஸ் பரவ வாய்ப்பு
பின்னர் பசி ஏற்பட்டால் எஞ்சியதை மீண்டும் வந்து சாப்பிடும். இதற்கு மத்தியில், ரேபிஸ் பாதிப்புள்ள நாய்கள் சிறுத்தைகள் வேட்டையாடியதை வந்து சாப்பிட்டால் அந்த இறைச்சியில் நாய்களின் ரேபிஸ் பரவி இருக்கும். அதனை மீண்டும் சாப்பிடும் சிறுத்தைகளுக்கு ரேபிஸ் பரவ வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் பிற வனவிலங்குகளுக்கும் பரவி விடும். அதேபோல ரேபிஸ் பாதித்த நாய்கள் வனத்தில் உலவும் கால்நடைகளை கடித்தால் அதற்கும் இந்த பாதிப்பும் ஏற்படும்.

தடுப்பூசிகள் போடுவது வழக்கமானதுதான்
இந்த கால்நடைகளை சீட்டாக்கள் வேட்டையாடும் பட்சத்தில் சீட்டாக்களுக்கு ரேபிஸ் பரவ வாய்ப்புள்ளது. எனவே இந்த ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. தற்போது ஏறத்தாழ நிறைவு பெற்றுவிட்டது. வனவிலங்கு சரணாலயத்தை சுற்றியுள்ள கால்நடைகளுக்கு இதுபோல தடுப்பூசிகள் போடுவது வழக்கமானதுதான். ஆனால் தற்போது முதல் முறையாக நாய்களை குறிவைத்துபோடப்பட்டுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications