கழற்றிவிடும் பாஜக.. அமேதியில் சுயேச்சையாக களமிறங்கும் தம்பி வருண் காந்தி? ராகுல் காந்திக்கு‛ செக்’?
அமேதி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜகவின் எம்பியாக உள்ள அவரது தம்பதி வருண் காந்தி சுயேச்சையாக அமேதி தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் தான் வருண் காந்தி அதுபற்றி முக்கிய விளக்கம் தந்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. ராகுல் காந்தி கடந்த ஆண்டை போல் 2 தொகுதிகளில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. கடந்த முறை ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். மாறாக கேரளா மாநிலம் வயநாட்டில் வெற்றி பெற்றார்.

அமேதி என்பது காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியாகும். இந்நிலையில் அங்கு ராகுல் காந்தி தோற்றது காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும் வயநாட்டில் ராகுல் காந்தி வென்றதால் அவர் எம்பியானார். இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
அதாவது உத்தர பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரளா மாநிலம் வயநாடு தொகுதிகளில் மீண்டும் அவர் போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் கேரளாவில் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜாவின் மனைவி ஆனி ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் ராகுல் காந்தி அந்த தொகுதியை விட்டு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மாறாக ராகுல் காந்தியும் வயநாட்டில் போட்டியிட்டால் அது ‛இந்தியா' கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தும். இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி வயநாட்டில் களமிறங்காமல் வேறு தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. வயநாடு நாடாளுமன்ற தொகுதி நிலவரம் இப்படி இருக்க உத்தர பிரதேச மாநிலம் அமேதி நாடாளுமன்ற தொகுதி நிலவரம் வேறு விதமாக உள்ளது.
அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். இதனால் வரும் தேர்தலிலும் அவர் தான் பாஜக சார்பில் மீண்டும் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. அதேபோல் கடந்த தேர்தலில் தோற்றதை மறந்து வரும் தேர்தலில் அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அது காங்கிரஸ் கட்சியின் தொகுதி என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் ராகுல் காந்தி உள்ளார்.
இத்தகைய சூழலில் தான் ராகுல் காந்தியை எதிர்த்து அமேதி தொகுதியில் அவரது தம்பியும், தற்போதைய பாஜக எம்பியுமான வருண் காந்தி வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி -பெரோஸ் காந்தி தம்பதிக்கு 2 மகன்கள். மூத்த மகன் ராஜீவ் காந்தி. இளைய மகன் சஞ்சய் காந்தி. ராஜீவ் காந்தி -சோனியாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என்ற மகன், மகள் பிறந்தனர். சஞ்சய் காந்தி மேனகா காந்தியை திருமணம் செய்தார். இவர்களின் மகன் தான் வருண் காந்தி. அதாவது வருண் காந்தி ராகுல் காந்திக்கு சித்தப்பாவின் மகன் ஆவார்.
சஞ்சய் காந்தி மறைவை தொடர்ந்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் மேனகா காந்தி பாஜகவில் இணைந்தார். தாய் மேனகா காந்தி வழியில் மகன் வருண் காந்தியும் பாஜகவில் உள்ளார். வருண் காந்தி தற்போது உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதி எம்பியாக உள்ளார். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் அவர் ராகுல் காந்தியை எதிர்த்து சுயேச்சையாக அமேதி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது பாஜகவில் செல்வாக்கு பெற்ற தலைவராக வருண் காந்தியின் அம்மா மேனகா காந்தி இருந்தார். நரேந்திர மோடியின் முதல் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக மேனகா காந்தி இருந்தார். தற்போது பதவி இன்றி அவர் உள்ளார். இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிலிபிட் தொகுதியை வருண் காந்தி தனது தாய் மேனகா காந்திக்கு விட்டு கொடுக்க முடிவு செய்துள்ளார். இந்த தொகுதியில் சுயேச்சையாகவும், பாஜக சார்பிலும் அவர் பலமுறை வென்று எம்பியான நிலையில் மீண்டும் தாயை எம்பியாக்கி அழகு பார்க்க வருண் காந்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் வருண் காந்தி பாஜகவில் இருந்து வெளியேறி அமேதி தொகுதியில் அண்ணன் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அமேதி என்பது வருண் காந்தியின் தந்தை சஞ்சய் காந்தி 1980ல் போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். இதனால் வருண் காந்தி அங்கு போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது வருண் காந்தி சமீபகாலமாக பாஜகவின் கொள்கைகளை விமர்சித்து வருகிறார். இதனால் வரும் தேர்தலில் அவருக்கு பாஜக சீட் வழங்காது என கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் அமேதியில் அவர் சுயேச்சையாக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வேகமாக பரவ தொடங்கின. இந்நிலையில் தான் இந்த தகவலை வருண் காந்தி முற்றிலுமாக மறுத்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடவில்லை என விளக்கம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications