“வக்பு வாரிய விவகாரங்களில் அரசின் தலையீடே இருக்காது”.. உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!
டெல்லி: வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இடம்பெற மாட்டார்கள். வக்ஃப் விவகாரங்களில் அரசின் தலையீடு இருக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், வக்ஃப் விவகாரங்களில் அரசின் தலையீடு இருக்காது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்துள்ளார்.

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா (Waqf Amendment Bill) கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து அதில் மாற்றங்களை செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 25 மாற்றங்கள் செய்யப்பட்ட்டு இன்று இந்த மசோதாவின் புதிய வரைவு தாக்கல் செய்யப்பட்டது. வக்பு சட்டத்திருத்த மசோதா 2025-ஐ, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த மசோதாவின் மீது விவாதம் செய்ய சுமார் 8 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. பல்வேறு கட்சியின் உறுப்பினர்களும் இதன் மீது பேசினர். இந்நிலையில், வக்பு சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
அப்போது பேசிய அமித் ஷா, "மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு நான் ஆதரவளிக்கிறேன். நண்பகல் 12 மணிமுதல் நடைபெற்றுவரும் விவாதத்தை கவனித்து வருகிறேன். பலர் இந்த மசோதாவை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். அது இயல்பாகவோ அல்லது அரசியலாகவோ இருக்கலாம். அவையின் இவ்வாறு நடந்துகொள்வதன் மூலம் நாடு முழுவதும் தவறான கருத்துகளைப் பரப்ப அவர்கள் முயற்சிக்கின்றனர்.
வக்ஃப் மசோதா பெயரில் இஸ்லாமியர்களை அச்சுறுத்தி வாக்கு வங்கி அரசியல் நடக்கிறது. எதிர்க்கட்சிகள் இதனை இலக்காக வைத்தே மக்களவையில் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றன. வக்ஃப் விவகாரங்களில் அரசின் தலையீடு இருக்காது; அந்த எண்ணம் அரசுக்கு இல்லை. ஆனால், வக்ஃப் வாரியங்களை மேற்பார்வையிடும் நிர்வாக பணியை மட்டும் அதிகாரிகள் செய்வார்கள்.
வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இடம்பெற மாட்டார்கள். அதற்காக இஸ்லாம் மக்களால் வழங்கப்பட்ட நன்கொடைகளில் அரசு தலையிடும் என தவறான கருத்துகளை பரப்ப முயற்சிக்கின்றனர். முஸ்லிம் அல்லாதவர்கள் கவுன்சிலில் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். அவர்களால் மத நடவடிக்கைகளில் தலையிட முடியாது. வக்ஃப் சட்டத்திருத்தத்தின் கீழ் நன்கொடையாக வழங்கப்பட்ட சொத்து, அதன் நிர்வாகம் சட்டப்படி நடக்கிறதா? எந்த நோக்கத்துடன் நன்கொடை வழங்கப்பட்டது? போன்ற நிர்வாகப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள முடியும்.
வக்பு வாரியம் அரசாங்க நிலத்தை கையகப்படுத்தத் தொடங்கியது. தமிழ்நாட்டில், 400 ஆண்டுகள் பழமையான கோயில் சொத்து வக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்டது. பிரயாக்ராஜில் உள்ள சந்திர சேகர் ஆசாத் பூங்கா உட்பட பல்வேறு மதங்களைச் சேர்ந்த பல சொத்துக்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்டன. ஐந்து நட்சத்திர ஹோட்டல் நிலம் வக்பு வாரிரயத்திற்கு மாதம் 12,000 ரூபாய்க்கு வழங்கப்பட்டது.
இதையெல்லாம் இந்த வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தடுக்கும். இந்த மசோதா சொத்துக்களைப் பாதுகாக்கும். ASI சொத்துக்கள், பழங்குடியினரின் நிலங்கள், தனியாரின் சொத்துக்கள் மற்றும் நீங்கள் தனியார், தனிப்பட்ட சொத்தை மட்டுமே வக்பு வாரியத்திற்கு நன்கொடையாக வழங்க முடியும். ஒரு சமூகத்தின் நிலத்தை அல்ல. இந்த மசோதா வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அமித் ஷா, "மக்களிடம் இருந்து 1 கோடிக்கும் அதிகமான ஆலோசனைகளை பெற்றுள்ளோம். எங்கள் கொள்கை தெளிவாக உள்ளது, வாக்கு வங்கிக்காக எந்த சட்டத்தையும் நாங்கள் கொண்டு வர மாட்டோம், இது நீதிக்கானது. இந்த மசோதா, கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications