விபத்தில் சிக்கினார் மம்தா பானர்ஜி.. மேற்கு வங்க முதலமைச்சருக்கு என்னாச்சு? விபத்து நடந்தது எப்படி?
கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்தில் சிக்கியதில் அவரது தலையில் லேசான காயம் ஏற்பட்டு உள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று 2024 மக்களவைத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணியில் தொடர்வதாக அறிவித்தாலும் மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டி என்று இன்று அறிவிப்பு வெளியிட்டார். இது காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளை அதிர்ச்சியடைய வைத்த நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் கொல்கத்தாவில் இருந்து மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியானது. ஆம், கொல்கத்தா செல்லும் வழியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கார் விபத்தில் சிக்கியதாக செய்தி வந்து இருக்கிறது.

பர்தமான் என்ற பகுதியில் இருந்து கொல்கத்தாவுக்கு சாலை மார்க்கமாக காரில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு இருக்கிறது. மோசமான வானிலை காரணமாக அவர் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து விட்டு காரில் சென்று இருக்கிறார். அப்போது சாலையில் எதிரே வேகமாக வந்த மற்றொரு வாகனத்துடன் மம்தா பானர்ஜி சென்ற கார் மோதும் நிலை ஏற்பட்டது. இதனை தடுக்க வண்டியின் ஓட்டுநர் வேகமாக பிரேக் போட்டு காரை நிறுத்தி இருக்கிறார்.
திடீரென கார் நின்றதில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையில் லேசான காயம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மம்தா பானர்ஜி கார் ஓட்டுநருக்கு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணித்து வந்து உள்ளார். அப்போது பிரேக் போட்டபோது விண்ட் ஸ்க்ரீனில் அவரது தலை வேகமாக முட்டி காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கொல்கத்தாவில் இருந்து 102 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் பர்பா பர்தமான் என்ற பகுதியில் நிர்வாக ஆய்வு கூட்டம் நடைபெற்று இருக்கிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து ஹெலிகாப்டரில்தான் பர்பா பர்தமான் பகுதிக்கு மம்தா பானர்ஜி சென்று இருக்கிறார். இந்த கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஹெலிகாப்டரில் கொல்கத்தா செல்ல ஆயத்தமானபோது மோசமான வானிலை நிலவி இருக்கிறது. முதலமைச்சரின் பாதுகாப்பு கருதி கார் மூலமாக 102 கிலோ மீட்டர் பயணம் செய்ய முடிவு செய்யப்பட்டு பயணித்து இருக்கிறார்கள். அப்போதுதான் இந்த விபத்து நிகழ்ந்து உள்ளது. இதில் காயமடைந்த மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி விரைந்து குணமடைய வாழ்த்துவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications