பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு: மேற்கு வங்க அரசின் மசோதா மீது ஆளுநர் எடுத்த முடிவு! என்ன நடக்கும்?
கொல்கத்தா: பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் மேற்கு வங்காள மாநில சட்டமன்றத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு மம்தா பானர்ஜி அரசு அனுப்பி வைத்த நிலையில், இந்த மசோதாவை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது நிரம்பிய பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார். கடந்த மாதம் 9 ம் தேதி இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவ மாணவி கொலைக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. பெண் டாக்டர் கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர். தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிஐ இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் முன்னாள் முதல்வரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது.
கொல்கத்தாவில் நடந்த இந்த சம்பவம் என்பது மேற்கு வங்க மாநிலத்தை ஆட்சி செய்யும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் மம்தா பானர்ஜி குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்கிறார். ஆதாரங்களை அழிக்க நினைக்கிறார்.
இதனால் மம்தா பானர்ஜி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவோம் என்று மம்தா பானர்ஜி உறுதியளித்தார். இதன்படி, கடந்த 3 ஆம் தேதி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில், ‛அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் மசோதா (மேற்கு வங்க குற்றவியல் சட்டங்கள் மற்றும் திருத்தம்) என்ற பெயரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி பலாத்காரம் செய்து பெண்ணை கொல்வது அல்லது கோமா நிலைக்கு தள்ளும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். அதேபோல் பாலியல் பலாத்காரம், கூட்டு பலாத்காரம் செய்யும் நபர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை என்பது வழங்கப்படும். ஒருமுறை பாலியல் வழக்கில் சிக்கும் நபர் மீண்டும் அதே மாதிரியான குற்றத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டன.
இந்த மசோதா ஒருமனதாக சட்டமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக மேற்கு வங்க அரசு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் ஆனந்த் போஸ், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளார். எனவே இனி குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த பின்னரே இந்த சட்டம் நடைமுறைப்படுத்த முடியும்.












Click it and Unblock the Notifications