அலாரம் அடிக்குது ராசா- மமதா பானர்ஜிக்கு எதிராக மே.வ. முஸ்லிம்கள்? திரிணாமுலை கதறவைத்த ’பங்கர்’ ISF!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தலில் முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை அறுவடை செய்திருக்கிறது. ஆனால் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் முஸ்லிம்களின் ISF- சிபிஎம் கூட்டணி மமதா பானர்ஜி கட்சியை அலறவைக்கும் வகையில் அதிக இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது.
மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தல் 3 அடுக்குகளைக் கொண்டது. மொத்தம் கிராம பஞ்சாயத்துகள் 3,317 22; ஜில்லா பரிஷத்துகளில் 928 இடங்கள்; 9,730 பஞ்சாயத்து சமிதி இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றன. இதில் திரிணாமுல் காங்கிரஸ் 85,817; பாஜக 56,321; மார்க்சிஸ்ட் கட்சி 48,646; அதன் கூட்டணியான காங்கிரஸ் 17,750 வேட்பாளர்களை நிறுத்தியது. உள்ளாட்சி அமைப்பின் 3 அடுக்குகளில் பெரும்பான்மை இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி இருக்கிறது. 2-வதாக பாஜகவும் 3-வதாக சிபிஎம், 4-வதாக காங்கிரஸும் இடங்களைப் பெற்றுள்ளன.

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருப்பது தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பங்கர் பிராந்தியம்தான். இப்பிராந்தியத்தில் Indian Secular Front - ஐஎஸ் எஃப், சிபிஎம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. பங்கர்-II பிளாக்கில் மொத்தம் 10 கிராம பஞ்சாயத்துகளில் 218 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம் முதலே அதிக வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் ஒன்று இது. இப்பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் - ஐஎஸ் எஃப் கட்சிகளிடையேயான மோதல்களில் இருதரப்பிலும் முஸ்லிம்கள் 15 பேர் கொல்லப்பட்டனர். பல இடங்களில் வேட்புமனுக்களையே தாக்கல் செய்யவிடவில்லை திரிணாமுல் காங்கிரஸ் என ஐஎஸ் எஃப் புகாரும் தெரிவித்திருந்தது.
இப்பகுதியில் 218 இடங்களில் 86 இடங்களில் போட்டியின்றி திரிணாமுல் காங்கிரஸ் வென்றது. எஞ்சிய 132 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் 63 இடங்களைக் கைப்பற்றியது. ஐஎஸ் எஃப் கட்சியானது 43 இடங்களில் வென்றுள்ளது. Jomi Jibika Bastutantra Poribesh Rokkha Committee என்ற கட்சியும் 18 இடங்களில் வென்றுள்ளது. அதாவது திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிரான கட்சிகள் மொத்தம் 68 இடங்களில் வென்றுள்ளன. அதேநேரத்தில் மொத்தமாக இப்பிராந்தியத்தின் 10 கிராம பஞ்சாயத்துகளில் 9-ல் திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றிருக்கிறது.
என்னதான் திரிணாமுல் காங்கிரஸ் மாஸ் வெற்றியை மாநிலம் முழுவதும் பெற்றாலும் அக்கட்சிக்கு அச்சுறுத்தலாக, இதுவரையில் அக்கட்சியின் வாக்கு வங்கியாக இருந்து வரும் முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் திரும்பி இருக்கின்றனர் என்பதையே பங்கர் பிராந்திய தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இதனால் பாஜகவும் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஐஎஸ் எஃப் -ன் பங்கர் விஸ்வரூபம் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் விஸ்வரூபம் எடுத்தால் மமதா பானர்ஜியின் செல்வாக்கு இனி வரும் சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் பெரும் சவாலை எதிர்கொள்ள நேரிடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த வெற்றி தொடர்பாக கருத்து தெரிவித்த ஐஎஸ் எஃப் நிர்வாகிகள், பங்கர் பிராந்தியம் திரிணாமுல் காங்கிரஸுக்கு வெற்றியை கொடுத்திருக்கலாம்.. ஆனால் மக்கள் அக்கட்சியை நிராகரித்து வருகின்றனர் என்பதே எதிர்க்கட்சிகளின் அமோக வெற்றி வெளிப்படுத்துகின்றது என்கின்றனர்.
அலாரம் அடிக்குது ராசா!












Click it and Unblock the Notifications