மெதுவாக வந்த கார்! அடுத்த நொடி பாய்ந்த 4 தோட்டாக்கள்.. சுவேந்து அதிகாரி உதவியாளர் கொலை! நடந்தது என்ன
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று, ஆட்சி மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அங்குத் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. அப்படி தான் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியின் நிழலாகவும், அவரது உதவியாளர் சந்திரநாத் ரத், கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே படுகொலை சம்பவம் தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்களே ஆகியுள்ளது. அங்கு 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தா அரசை வீழ்த்தி பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஓரிரு நாட்களில் புதிய பாஜக அரசு பதவியேற்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையே அங்கு பல்வேறு இடங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை வெடித்துள்ளது.

சுவேந்து அதிகாரி உதவியாளர்
இந்தச் சூழலில் தான் மத்தியம்கிராம் பகுதியில் பாஜகவின் முக்கிய தலைவரும் மேற்கு வங்க முதல்வர் ரேஸில் முன்னிலையில் இருக்கும் சுவேந்து அதிகாரியின் நிழலாக இருந்த அவரது சந்திரநாத் ரத், கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை மேற்கு வங்க அரசியலில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
சந்திரநாத் ரத் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். கார் வேகம் குறைந்த ஒரு தருணத்தைப் பயன்படுத்தி, காரின் முன் பக்க ஜன்னல் வழியாக நான்கு முறை சுட்டுள்ளனர். இதில் மூன்று குண்டுகள் சந்திரநாத் மீது பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரின் ஓட்டுநர் புத்ததேவ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிலைகுலைந்த சுவேந்து அதிகாரி
இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த சுவேந்து அதிகாரி, தனது உதவியாளரின் உடலைப் பார்த்து நிலைகுலைந்து போனார். இந்தத் தாக்குதல் திட்டமிட்டு, முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் நிதின் நபின் ஆகியோருடன் சுவேந்து அதிகாரி பேசியுள்ளார். இது கடந்த 15 ஆண்டுக்கால மம்தாவின் காட்டாட்சியின் விளைவு என்றும் பாஜக ஆட்சி அமைந்தவுடன் ரவுடிகளை கூண்டோடு ஒழிக்கும் பணியை பாஜக தொடங்கும் என்றும் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
போலீஸ் சொல்வது என்ன
இது தொடர்பாக மேற்கு வங்க டிஜிபி சித்த நாத் குப்தா கூறுகையில், "தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் நம்பர் பிளேட் போலியானது.. சம்பவ இடத்தில் இருந்து தோட்டாக்கள் மற்றும் முக்கியத் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகிறோம். யாரேனும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பார்த்தார்களா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்" என்றார்.
பகீர் குற்றச்சாட்டு
இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு திரிணாமுல் காங்கிரஸ் காரணம் என்று சுவேந்து அதிகாரி எதுவும் சொல்லவில்லை. இருப்பினும், பல்வேறு பாஜக தலைவர்களும் இதில் திரிணாமுல் காங்கிரஸுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சொல்லி வருகிறார்கள். மேலும், இந்தச் சம்பவத்தின் உண்மை குறித்துக் கண்டறிய முழுமையான சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications