தேர்தலில் வெறும் 822 வாக்குகள்! ஆனா ஓவர் நைட்டில் நாட்டிலேயே 5வது பெரிய கட்சியாக மாறிய NCPI.. எப்படி

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: இந்திய அரசியலில் ஒரு கட்சி செல்வாக்கு பெறப் பல ஆண்டுகள் ஆகும். ஆனால், நேற்று வரை யாருக்கும் தெரியாத ஒரு சிறிய கட்சி, இன்று இந்திய நாடாளுமன்றத்தின் அதிகார மையத்தையே மாற்றியமைக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது. அதுதான் நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா.. வெறும் 822 வாக்குகளை மட்டுமே பெற்ற ஒரு கட்சி, இன்று 20 எம்பிக்களைக் கொண்ட ஒரு பெரிய கட்சியாக மாறியது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினரால் வழிநடத்தப்படும் இந்த கட்சி, 2023 ஜனவரி 20ம் தேதி தான் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. இது ஒரு பதிவு செய்யப்பட்ட அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி ஆகும். இந்த கட்சி இதுவரை ஒரே ஒரு தேர்தலில் மட்டுமே போட்டியிட்டுள்ளது. அது 2023 திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல்.

West Bengal Split West Bengal TMC

வெறும் 822 வாக்குகள்

மேற்கு வங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், திரிபுராவில் களம் கண்டது. 7 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது, ஆனால் 4 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதியில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் வெறும் 822 மட்டுமே. கட்சியின் மொத்த நன்கொடை வெறும் ரூ. 1.13 லட்சம் மட்டுமே. இவ்வளவு சிறிய பின்னணி கொண்ட கட்சிதான் இப்போது இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

மேற்கு வங்க மாஜி முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சுமார் 20 எம்பிக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் மம்தாவின் பிடியிலிருந்து விலகி, இந்த NCPI கட்சியுடன் இணைய முடிவு செய்துள்ளனர். இந்த இணைப்புக்கு மக்களவை சபாநாயகர் ஒப்புதல் அளித்தால், NCPI கட்சிக்கு ஒரே இரவில் 20 எம்பிக்கள் கிடைப்பார்கள். இதன் மூலம் ஜீரோவில் இருந்த ஒரு கட்சி, திடீரென 20 எம்பிக்களுடன் விஸ்வரூபம் எடுக்கும்.

5வது பெரிய கட்சி

இந்த இணைப்பு நடந்தால், மக்களவையில் இந்த கட்சி நாட்டிலேயே 5வது மிக பெரிய கட்சியாக மாறும். அதாவது இப்போது நாட்டிலேயே மிக பெரிய கட்சியாக 240 எம்பிக்களுடன் பாஜக இருக்கிறது. அதைத் தொடர்ந்து 99 எம்பிக்களுடன் காங்கிரஸ் 2வது இடத்தில் இருக்கிறது. சமாஜ்வாதி கட்சி 37 எம்பிக்கள், திமுக 22 எம்பிக்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதைத் தொடர்ந்து NCPI 20 எம்பிக்களுடன் 5வது பெரிய கட்சியாக இருக்கும்.

மறுபுறம் 28 எம்பிக்கள் உடன் 4வது பெரிய கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ், தனது பலத்தை இழந்து வெறும் 9 எம்பிக்களுடன் சுருங்கிவிடும். NCPI இந்தியாவின் ஐந்தாவது பெரிய கட்சியாகவும், ஆளும் NDA கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாகவும் உருவெடுக்கும்.

மொத்தமே 2 பேர் தான்

மறுபுறம் NCPI கட்சியை பொறுத்தவரை அதன் தலைவரான உத்தியா குண்டு மற்றும் அவரது மனைவி ஷியூலி குண்டு (கட்சியின் பொருளாளரும் இவர் தான்) ஆகியோர் தான் கட்சியை வழிநடத்துகிறார்கள். உத்தியா குண்டு, பாஜகவின் முக்கிய தலைவரான சுவேந்து அதிகாரியுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சுவேந்து அதிகாரி முதல்வராகப் பதவியேற்க வேண்டும் என்று அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த திடீர் அரசியல் திருப்பம் NCPI கட்சியின் நிறுவனருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் நிறுவனர் சாந்தனு தே இந்த இணைப்பு குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், "நான்தான் இந்தக் கட்சியை தொடங்கினேன். ஷியூலி குண்டுவை தலைவராகவும், அவரது கணவரை முக்கிய பொறுப்பிலும் அமர்த்தினேன். ஆனால், இப்போது அவர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார்கள். இந்த இணைப்பு குறித்து எங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக

திரிணாமுல் எம்பிக்கள் திடீரென NCPIயுடன் இணைவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதற்குப் பின்னணியில் பாஜக இருப்பதாகவும் மம்தா தரப்பு குற்றஞ்சாட்டுகிறது. மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் இல்லத்தில் நடந்த கூட்டங்களில் அதிருப்தி எம்பிக்கள் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்தே இந்த கட்சியில் சேர முடிவெடுத்ததாகவும் கூறுகிறார்கள். இது அமித் ஷாவின் சதி என்று காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், இது திரிணாமுல் காங்கிரஸின் உட்கட்சிப் பூசல் என்றும், இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் பாஜக மறுத்துள்ளது.

என்ன காரணம்

அதிருப்தி எம்பிக்கள் ஏன் ஒரு புதிய கட்சியைத் தொடங்காமல், NCPI கட்சியைத் தேர்ந்தெடுக்க என்பதற்கு ஒரு சட்ட ரீதியான காரணம் உள்ளது. அதாவது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எம்பிக்கள் தங்களது பதவியை இழக்காமல் இருக்க வேண்டுமானால், அவர்கள் மற்றொரு கட்சியுடன் இணைய வேண்டும். NCPI ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால், அதனுடன் இணைவது சட்ட ரீதியாக அவர்களுக்குப் பாதுகாப்பைத் தரும்.

சில நாட்களுக்கு முன்பு வரை வெறும் 822 வாக்குகளை மட்டுமே பெற்ற கட்சியாக இருந்த என்சிபிஐ இப்போது 20 எம்பிக்களுடன் நாட்டிலேயே 5வது மிகப் பெரிய கட்சியாக மாறியுள்ளது. இது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு "அரசியல் அதிசயம்" என்றுதான் சொல்ல வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+