எட்டே நொடி! கவுன்சிலரை சுட்டு தள்ளிய நீல சட்டை அணிந்த நபர்- வீடியோ! ஒரே நாளில் 2 கவுன்சிலர்கள் கொலை
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு கவுன்சிலர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில் தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. சமீபத்தில் தான் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் பெரும்பாலான இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அதேநேரம் இதில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

2 கவுன்சிலர்கள் கொலை
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நேற்று இரு வேறு இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு கவுன்சிலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர் மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட வன்முறை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்த நிலையில், இந்தச் சம்பவம், மீண்டும் மாநிலத்தில் வன்முறையை ஏற்படுத்துமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

பதற வைக்கும் சம்பவம்
அங்குள்ள வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பானிஹாட்டி நகராட்சியின் திரிணாமுல் கவுன்சிலரான அனுபம் தத்தா, நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அனுபம் தத்தா ஒரு கடையில் இருந்து வெளியே வந்து இரு சக்கர வாகனத்தில் பின்புறம் அமர்கிறார். அப்போது அவரை நோக்கி வந்த நீல நிற உடை அணிந்த நபர், அனுபம் தத்தாவின் தலையில் சுட்டுவிட்டுத் தப்பி விடுகிறார். இவை அனைத்தும் வெறும் 8 நொடிகளில் நடந்து முடிகிறது.

மாறி மாறி குற்றச்சாட்டு
இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலையில் சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் கஷமினர் மனோஜ் வர்மா தெரிவித்தார். அம்மாவட்ட பாஜக எம்பியான அர்ஜூன் சிங்கே இந்த கொலைக்குக் காரணம் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள பாஜக, திரிணாமுல் காங்கிரசில் இருக்கும் உட்கட்சி பூசல் காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கவுன்சிலர்
அதேபோல புருலியா மாவட்டத்தின் ஜல்தா நகராட்சியில், நான்காவது முறையாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸின் தபன் காண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே இந்த கொலைக்குக் காரணம் எனக் காங்கிரஸ் சாடியுள்ளது. ஜல்தா நகராட்சியில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததாலேயே இந்த படுகொலை நடந்துள்ளதாகக் காங்கிரஸ் சாடியுள்ளது.

பாஜக தாக்கு
இப்படி ஒரே நாளில் மேற்கு வங்கத்தில் இரண்டு கவுன்சிலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே காட்டுவதாக எதிர்க்கட்சி தலைவரான பாஜகவின் சுவேந்து அதிகாரி குற்றஞ்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால், பொது மக்கள் எப்படிப் பாதுகாப்பாக உணருவார்கள்?" என்று அவர் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications