வங்கதேச வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு அடைக்கலம் தருவோம்: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிரடி
கொல்கத்தா: வங்கதேச நாட்டில் இடஒதுக்கீடு விவகாரத்தில் வெடித்த வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு அடைக்கலம் தர தயார் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்படும் 30% இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் நடத்திய போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக வெடித்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த வன்முறைகளால் அந்நாட்டு மக்களும் அங்கு கல்வி, வேலைவாய்ப்புக்காக சென்ற இந்தியர்களும் பெரும் துயரத்தில் சிக்கி இருக்கின்றனர்.
வங்கதேசம் முன்னர் கிழக்கு பாகிஸ்தானாக, பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. வங்க மொழி பேசிய கிழக்கு பாகிஸ்தான் மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் இன ஒடுக்குமுறையை ஏவியது. இதில் பல்லாயிரக்கணக்கான வங்கதேச மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து வெடித்தது வங்கதேச விடுதலைப் போர். இந்தியாவின் உதவியுடன் 1971-ல் வங்கதேசம் தனி சுதந்திர நாடாக உருவெடுத்தது.

வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் குடும்பங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு வழங்குகிறது அந்நாட்டு அரசு. முக்தி போதாக்களுக்கான இடஒதுக்கீடு என இது அழைக்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு சில ஆண்டுகளுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்ற தலையீட்டினால் மீண்டும் இந்த 30% இடஒதுக்கீடு உயிர் பெற்றது. இதற்கு எதிராகவே வங்கதேச மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் இந்தப் போராட்டம் வரலாறு காணாத வன்முறையாக வெடித்தது. இதனால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு தரப்புக்கும் மாணவர்களுக்கும் இடையேயான மோதலில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் இந்தியர்கள் உள்ளிட்டோர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டும் வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மமதா பானர்ஜி, வங்கதேச வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கு வங்க மாநில அரசு அடைக்கலம் தர தயாராக உள்ளது என்றார். வங்கதேசத்தில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் உறவினர்களுக்கான உதவிகளை மாநில அரசு செய்து தரும் என்றும் மமதா உறுதி அளித்துள்ளார்.
மேலும் நான் வங்கேச நாட்டின் பிரச்சனை குறித்து பேசவில்லை. அதைப் பேசுவதற்கு இந்திய மத்திய அரசு இருக்கிறது. ஆனால் வங்கதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மேற்கு வங்கத்தின் கதவுகளை தட்டும் போது நாங்கள் அடைக்கலம் கொடுப்போம். உதவி கேட்டு வரும் அகதிகளுக்கு உரிய மரியாதை தருவதை ஐநா உறுதி செய்திருக்கிறது என்றார் மமதா பானர்ஜி.


Click it and Unblock the Notifications
