"கணவராகவே இருந்தாலும் பலாத்காரம் என்பது பலாத்காரம்தான்!" அடுத்து குஜராத் ஐகோர்ட் சொன்ன பரபர மேட்டர்
காந்தி நகர்: கணவராகவே இருந்தாலும் பெண் ஒருவரின் அனுமதி இல்லாமல் உறவு கொண்டால் அது பலாத்காரம் தான் என்று குஜராத் ஐகோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
நமது நாட்டில் திருமண உறவில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் அதிகமாகவே இருக்கிறது. இதில் இருந்து அவர்களைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் இருந்தாலும் அந்த சட்டங்களில் சில ஓட்டைகள் இருக்கவே செய்கிறது..

குறிப்பாகப் பெண்களின் சம்மதம் இல்லாமல் கணவர் அவர்களுடன் உறவு கொள்ளும் marital rape-க்கு எதிராக இந்தியாவில் சட்டம் இல்லை. இதற்கு எதிரான சட்டம் வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
குஜராத் ஐகோர்ட்: இதற்கிடையே இந்த விவகாரத்தில் குஜராத் ஐகோர்ட் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. பலாத்காரம் என்பது பலாத்காரம் தான் என்ற குஜராத் ஐகோர்ட், ஆண் ஒருவரால் தன் மனைவி மீது நடத்தப்பட்டாலும் அது பலாத்காரம்தான் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகளை மூடிமறைக்கும் போக்கை கலைக்க வேண்டும் என்றும் குஜராத் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
குஜராத் ஐகோர்ட்டில் இது தொடர்பாக நடந்த வழக்கில் நீதிபதி திவ்யேஷ் ஜோஷி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பதை தற்போது நம்மிடம் இருக்கும் டேட்டாவை விட அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவில் மோசமான வன்முறை அரங்கேறிய பிறகும் அதே ஆபத்தான சூழலில் பெண்கள் இருக்க வேண்டியதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்
கவலை: இது தொடர்பாக நீதிபதி மேலும் கூறுகையில், "பாலோ செய்வது, ஈவ்-டீசிங், ஆபாசமாகப் பேசுவது, தாக்குவது, துன்புறுத்தல் ஆகியவற்றை சிறிய குற்றங்களாகப் பார்க்கிறோம். கவலைக்குரிய வகையில் பலரும் நார்மலாக்கிவிட்டனர். கொடுமை என்னவென்றால் படங்களில் இவை எல்லாம் ஆகச் சிறந்த காரியங்கள் என்பது போலக் கூட காட்டுகிறார்கள்.
என்ன ஆனாலும் ஆண்கள் ஆண்களாகவே இருப்பார்கள் என்ற கோணத்தில் குற்றங்களைப் பார்க்கும் மனப்பான்மை மற்றும் அவர்களை மன்னிக்கும் மனப்பான்மை சமூகத்திலும் இதனால் பாதிக்கப்படுவோருக்கும் மிக மோசமான ஆபத்தையும் தீங்கையும் ஏற்படுத்துகிறது" என்று அதில் கூறப்பட்டது.
என்ன வழக்கு: மருமகளைக் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் பெண் ஒருவர் தாக்கல் செய்த ஜாமீன் வழக்கில் குஜராத் ஐகோர்ட் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதாவது அந்த பெண்ணின் கணவரும் மகனும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு மருமகளைப் பலாத்காரம் செய்து அதை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். அதை அவர்கள் ஆபாச தளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இதற்கு அந்த மாமியாரும் உடந்தையாக இருந்துள்ளார். அந்த மாமியார் கைதான நிலையில், அவர் ஜாமின் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் தான் இந்த கருத்துகளைக் கூறி, அந்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. நீதிபதி மேலும் கூறுகையில், ""பெரும்பாலான வழக்குகளில் (ஒரு பெண்ணைத் தாக்குவது அல்லது பலாத்காரம் செய்வது) போன்ற கொடூரச் செயல்களைக் கணவர் செய்தால் அவர் தண்டிக்கப்படுவதில்லை. அவனுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. என்னை பொறுத்தவரை ஆண் என்பது ஆண் தான்.. பலாத்காரம் என்பது பலாத்காரம் தான்.. கணவனே மனைவியைப் பலாத்காரம் செய்தாலும் அது பலாத்காரம் தான்
பாலின வன்முறை: அரசியலமைப்புச் சட்டம் பெண்ணை ஆணுக்குச் சமமாகக் கருதுகிறது மற்றும் திருமண உறவில் இருவரையும் சமமாகவே பார்க்கிறது. ஆனால், நமது நாட்டில் பாலின வன்முறை என்பது கலாச்சாரத்தில் மறைக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமத்துவமற்ற நிலை இருக்கிறது. இந்தியாவில் பெண்களுக்கு இதுபோன்ற குற்றங்கள் பெரும்பாலும் அவர்களுக்குத் தெரிந்த நபர்களாலேயே நடக்கிறது. ஆனால், சில காரணங்களால் பெண்கள் புகார் அளிக்க முன்வருவதில்லை" என்றார்.
மேலும், பெண்கள் தங்கள் மவுனத்தைக் கலைத்து புகார் அளிக்க முன் வர வேண்டும் என்ற நீதிபதி, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், அமெரிக்கா, பிரிட்டன் நியூசிலாந்து, பிரான்ஸ், டென்மார்க், போலாந்து உள்ளிட்ட நாடுகளில் பலாத்காரம் செய்தால் கணவரையும் தண்டிக்க விதிகள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.












Click it and Unblock the Notifications