‛ராமர் கோவில் கட்டும்போது தான் அயோத்தி வருவேன்’.. 32 ஆண்டு சபதத்தில் வென்ற பிரதமர் மோடி! பின்னணி
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் இன்று தலைமை விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று சடங்குகள் செய்ய உள்ளார். இதன்மூலம் 32 ஆண்டுக்கு முன்பு அவர் ஏற்ற சபதத்தை நிறைவேற்றி உள்ளார். அப்படி பிரதமர் மோடி கடந்த1992ல் என்ன கூறினார்? வாங்க பார்க்கலாம்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக இந்த விழாவில் பங்கேற்று கோவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள 5 வயது நிரம்பிய குழந்தை பருவ ராமர் சிலைக்கு சடங்குகள் செய்ய உள்ளார்.

இந்த விழாவால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மொத்தம் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழத்தில் இருந்தும் பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இன்றைய விழாவில் பங்கேற்பதன் மூலம் பிரதமர் மோடி 32 ஆண்டுக்கு முன்பு தான் ஏற்ற சபதத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி காட்டியுள்ளார்.
அப்படி 1992ம் ஆண்டில் என்ன நடந்தது? அப்போது அயோத்தி சென்ற பிரதமர் மோடி என்ன சபதம் ஏற்றார்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். அதாவது 1992ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி அயோத்தி ராமர் கோவில் பிரச்சனை இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இந்த பிரச்சனை என்பது உச்சத்தை அடைந்த காலம் தான் அது. அன்றைய தினம் பிரதமர் மோடி பாஜகவின் மூத்த தலைவராக இருந்த முரளி மனோகர் ஜோஷியுடன் அயோத்திக்கு சென்றார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான ஏக்தா யாத்திரையின் ஒருபகுதியாக இந்த விசிட் அமைந்து இருந்தது.
அப்போது ஆர்எஸ்எஸ் அமைப்பு மூலம் பாஜகவுக்காக பிரதமர் மோடி பணியாற்றி வந்தார். அவர் எம்எல்ஏ பதவி கூட வகிக்காத காலம் அது. அயோத்தியில் அந்த சமயத்தில் கூடாரத்தில் ராமர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று மோடி முழக்கங்களை எழுப்பினார். ராமர் வழிபாட்டில் அவர் பங்கேற்றார். அங்கேயே கூடாரம் அமைத்து தங்கினார். இந்த வேளையில் தான் பிரதமர் மோடி சபதம் ஒன்றை ஏற்றார்.
அதாவது, ‛‛இந்த விசிட்டுக்கு பின் நான் இனி அயோத்தி ராமர் கோவில் கட்டும்போது தான் வருவேன்'' என கூறியுள்ளார். அதன்பிறகு நீண்ட காலத்துக்கு பின் கடந்த 2019ல் உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 2020 ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அயோத்தி சென்று ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். இன்றைய தினம் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக அயோத்தி ராமர் கோவிலில் பிரதான் பிரதிஷ்டை சடங்கு செய்ய உள்ளார்.

முன்னதாக நரேந்திர மோடி, முரளி மனோகர் ஜோஷியுடன் அயோத்தி சென்றதை போட்டோ எடுத்த மகேந்திர திரிபாதி கூறுகையில், ‛‛பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை பார்க்க முரளி மனோகர் ஜோஷியுடன் வந்தார். அப்போது நான் மட்டுமே போட்டோகிராபராக அங்கு இருந்தார். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் போட்டோகிராபராக செயல்பட்டேன். மோடி-முரளி மனோகர் ஜோஷி சேர்ந்து இருப்பதை போட்டோவாக எடுத்தேன்.
அதன்பிறகு சில பத்திரிகையாளர்கள் வந்தனர். அப்போது முரளி மனோகர் ஜோஷி தான் மோடியை அறிமுகம் செய்து வைத்தார். குஜராத்தை சேர்ந்தவர். பாஜகவில் இருக்கிறார் என மோடியை அடையாளப்படுத்தினார். இந்த வேளையில் நான் மற்றும் சில பத்திரிகையாளர்கள் அவரிடம் ‛இனி எப்போது அயோத்தி வருவீர்கள்' என்று கேட்டோம். அதற்கு அவர், ‛ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும்போது தான் வருவேன்' என்றார். அதன்படியே அவர் 2020ம் ஆண்டில் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டி இன்றைய பிரான் பிரதிஷ்டையில் பங்கேற்கிறார்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications