தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்ரவி மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? போராட்டம் நடத்தியவர்கள் என்ன சொல்கிறார்கள்?
தமிழ்நாடு ஆளுநரின் தருமபுரம் ஆதீன வருகையின்போது தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள், அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
"ஆளுநரின் கான்வாய் வரும் நேரத்தில் இரண்டு வெள்ளை வேன்களை போலீஸார் குறுக்கே நிறுத்திவிட்டனர். எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கலவரம் நடந்ததாக பா.ஜ.கவினர் கூறுவது ஏற்புடையதல்ல" என்கின்றனர் போராட்டக்குழுவினர்.
தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர விழாவுக்காக மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் இருந்து ஞானரத யாத்திரை ஒன்று கடந்த 19 ஆம் தேதி கிளம்பியது. இதனை தொடங்கி வைப்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார்.
நீட் விலக்கு மசோதா உள்பட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி கிடப்பில் போட்டுள்ளதால், அவருக்கு கறுப்புக் கொடி காட்டி, எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் கூறியிருந்தனர். இதுதொடர்பாக, தருமபுர ஆதீன மடத்தின் மேலாளரையும் நேரில் சந்தித்துப் பேசினர்.
எதிர்ப்புக்கிடையே ஆளுநர் வருகை
ஆனாலும், ஆளுநரின் வருகை உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது' என்பதற்காக மூன்றடுக்குப் பாதுகாப்பை தமிழ்நாடு காவல்துறை அளித்திருந்தது.
அதையும் மீறி ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீது கறுப்புக் கொடிகளும் கற்களும் வீசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின. இதுதொடர்பாக, தமிழ்நாடு டி.ஜி.பிக்கு ஆளுநரின் பாதுகாப்பு அலுவலர் விஷ்வேஸ் சாஸ்திரி கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
கடிதம் சொல்வது என்ன?
அந்தக் கடிதத்தில், "தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகாசன்னிதாசத்தின் அழைப்பை ஏற்று ஞானரத யாத்திரையை தொடங்கி வைப்பதற்கு ஆளுநர் சம்மதம் தெரிவித்தார். மேலும், மடத்தின் வளாகத்தில் கட்டப்பட உள்ள புதிய ஆடிட்டோரியத்துக்கான அடிக்கல் நாட்டவும் சம்மதம் தெரிவித்திருந்தார். ஆளுநரின் பயணம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ்.பி, அரசின் மூத்த அதிகாரிகளுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
காலை 9.50 மணியளவில் தருமபுரம் மடத்தை நோக்கி ஆளுநரின் கார் சென்று கொண்டிருந்தபோது மன்னம்பந்தல் பகுதியில் ஆளுநருக்கு எதிராக முழக்கம் எழுப்பியவர்களைப் பார்க்க முடிந்தது. காவல்துறையின் தடையை மீறி சாலையை நோக்கி அவர்கள் வரத் தொடங்கினார்கள்.
- டெல்லியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி - நீட் விலக்கு மசோதா, பாதுகாப்பு குளறுபடி விவகாரமா?
- ஆளுநர் ஆர். என். ரவி - பாதுகாப்பு விவகாரம்: முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த விளக்கம் என்ன?
கூட்டத்தில் இருந்து கொடிகளும் சில பொருள்களும் எறியப்பட்டன. ஆனால், ஆளுநர் மற்றும் ஆளுநரின் கான்வாய் ஆகியவற்றுக்கு எந்தவித தீங்கும் ஏற்படவில்லை. அங்கு கூடியிருந்த கூட்டத்தின் செயல்பாடுகள் வழக்குப் பதிவு செய்வதற்கு உரியது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை குற்றச்சாட்டு
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, "ஆளுநர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தி.மு.க தொண்டர்கள் தன்னிச்சையாக நடத்திய தாக்குதல் கிடையாது. கடந்த மூன்று நாள்களாக தி.மு.க தலைவர்கள் கொடுத்த ஊக்கத்தினால் தொண்டர்கள் நடத்திய தாக்குதல். இந்த விவகாரத்தில் ஆளுநரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்" என்றார்.
இதனைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மாநில அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்
இதுதொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார்.
"ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கொடிகளை வீசியதாக கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை என ஏ.டி.ஜி.பி விளக்கம் அளித்துள்ளார். சம்பவ இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகளை அமைத்து தங்களது கட்டுப்பாட்டில் போலீஸார் வைத்திருந்தனர். ஆளுநரின் கான்வாய் கடந்து சென்ற பின்பே கையில் வைத்திருந்த கறுப்புக் கொடிகளை போராட்டக்காரர்கள் வீசியுள்ளனர்" எனக் குறிப்பிட்டுவிட்டு, "நடக்காத ஒன்றை வைத்து கற்பனை செய்து அரசியல் செய்ய வேண்டாம்" என எதிர்க்கட்சித் தலைவரை விமர்சித்தார்.
ஆளுநரின் கான்வாய் கடந்தபோது அங்கு என்ன நடந்தது? என போராட்டக்குழுவினரில் ஒருவரும் தமிழ்மண் தன்னுரிமை இயக்கத்தின் நெறியாளருமான பேராசிரியர் செயராமனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
என்ன நடந்தது? - போராட்டக்காரர்கள் கூறுவது என்ன?
அவர் கூறுகையில், "முதலாவதாக, ஜனநாயக ரீதியாக கறுப்புக் கொடியைக் காட்டி ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகத்தான் கூடினோம். அங்கு காவல்துறையும் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். எங்களுக்கு முன்னால் கயிறு ஒன்றையும் கட்டியிருந்தனர். இதை மீறி நீங்கள் வெளியில் வரக்கூடாது எனவும் வேண்டுகோள் வைத்தனர். அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டி, எங்கள் உணர்வை வெளிப்படுத்துதன் நோக்கமே தவிர, கலவரம் செய்வது அல்ல."
"இரண்டாவதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகள் என்று பார்த்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 30 பேர் வந்திருந்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் வந்திருந்தனர். தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அங்கே எந்த வேலையும் இல்லை'' என்கிறார்.
"மூன்றாவதாக, சுமார் 9.50 மணியளவில் ஆளுநரின் கான்வாய் வந்தது. அதுவரையில் தொடர்ந்து முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தோம். நாங்கள் கறுப்புக் கொடி காட்டுவதை ஆளுநர் தனது கண்களால் பார்க்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். ஆனால், கல்வீசியதாக செய்திகளைப் பரப்புகின்றனர்."
"பா.ஜ.க மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை, பொறுப்பற்ற முறையில் செய்திகளைப் பதிவு செய்கிறார். ஒரு பட்டாணி கடலை அளவுள்ள கல்கூட வீசப்படவில்லை என்பதுதான் உண்மை. மன்னம்பந்தல் பகுதியில் வடகரை செல்லக் கூடிய சாலையில் எங்களை காவல்துறை முடக்கிவிட்டது'' என்கிறார் பேராசிரியர் செயராமன்.
2 வெள்ளை வேன்களும் 100 வீடியோக்களும்
தொடர்ந்து அவர் கூறுகையில், "ஆளுநரின் கான்வாய் வரும் நேரத்தில் இரண்டு வெள்ளை வேன்களை கொண்டு வந்து எங்கள் முன்னால் நிறுத்தி, ஆளுநர் எங்களைப் பார்க்க முடியாதபடி செய்துவிட்டனர். இதனால் எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதையும் மீறி Go Back Governor' என முழக்கம் எழுப்பினோம். எங்களின் முழக்கத்தை ஆளுநர் கேட்டிருப்பார். சிலர் வெறும் கறுப்புக் கொடியை மட்டும் வீசியெறிந்தனர். அதுவும் பின்னால் வந்த காவல்துறை வாகனத்தின் மீதுதான் விழுந்தது. கறுப்புக் கொடியோடு வேறு எந்தப் பொருளையும் பயன்படுத்தவில்லை'' என்கிறார்.
"குடிநீர் பாட்டில்களை வீசியெறிந்ததாக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி புகாரில் கூறியிருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக 100 வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்த்து முடிவு செய்யட்டும். மேலும், பொய்யான புகாரை கொடுத்த ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசைக் குறை சொல்வதற்காக பொய்க் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்'' என்கிறார்.
பாரதிய ஜனதா கட்சி கூறுவது என்ன?
போராட்டக் குழுவினர் கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டபோது, "ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி விரிவாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார். அந்த இடத்தில் வீடியோ ஆதாரங்களும் நிச்சயமாக இருக்கும். பாதுகாப்பு அதிகாரி பொய் சொல்கிறார் என்றால் இந்த வழக்கை தமிழ்நாடு காவல்துறை விசாரிப்பதைவிட சி.பி.ஐ போன்ற அமைப்பு விசாரித்தால் உண்மை தெரிந்துவிடும்'' என்கிறார்.
"நீட் தேர்வைப் பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆளுநரைத் தாக்கும் நோக்கில்தான் செயல்பட்டுள்ளனர். இதற்கு அனுமதித்த தமிழ்நாடு அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது ஒரு மலிவான அரசியல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை'' என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
















Click it and Unblock the Notifications