இத பாருங்க! ஜாமீனில் வெளியே வருபவர்கள் தப்பிக்காமல் இருக்க காலில் ஜிபிஎஸ் பொருத்த முடிவு! காஷ்மீரில்
டெல்லி: இந்தியாவிலேயே முதல்முறையாகக் காஷ்மீர் போலீசார் ஜாமீனில் வெளியே வரும் குற்றவாளிகளை ஜிபிஎஸ் டிராக்கர் ஆங்க்லெட் மூலம் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர்.
நமது நாட்டில் விசாரணை நிலுவையில் இருக்கும் போது குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்படும். ஆனால் இதுபோல ஜாமீன் வங்கும் போது, அதையே வெளியே வரும் போது குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் வாய்ப்பும் இருக்கிறது.

இதன் காரணமாகவே பெரும்பாலான வழக்குகளில் ஜாமீன் வழங்க போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதற்கிடையே சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகளைக் கண்காணிக்க போலீசார் புதிய முறையைக் கையில் எடுத்துள்ளனர்.
காஷ்மீர் போலீசார்: அதாவது குற்றவாளிகள் கால்களில் ஜிபிஎஸ் டிராக்கரை மாற்றும் போலீசார், அதன் மூலம் அவர்களைக் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த தொழில்நுட்பம் நடைமுறையில் இருக்கும் நிலையில், இப்போது இந்தியாவுக்கும் இந்த முறை வந்துள்ளது. முதலில் ஜம்மு காஷ்மீர் போலீசார் இந்த டிராக்கரை சோதனை செய்கிறார்கள். முதற்கட்டமாக ஜாமீனில் வெளிவரும் பயங்கரவாதிகளைக் கண்காணிக்க இந்த ஜிபிஎஸ் டிராக்கர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இதை ஜிபிஎஸ் டிராக்கர் ஆங்க்லெட் (GPS tracker anklet) என்று அழைப்பார்கள். இது கணுக்காலைச் சுற்றி அணியும் சாதனமாகும். அமெரிக்கா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் ஜாமீன் பெற்றவர்கள் மட்டுமின்றி, பரோலில் வெளியே வருபவர்கள், வீட்டுக் காவலில் உள்ளவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் இதை பயன்படுத்துவார்கள். அதன்படி வெளியே வந்த நபரின் வீட்டை சுற்றி லிமிட் செட் செய்வார்கள்.
எப்படி வேலை செய்யும்: அந்த லிமிட்டை தாண்டினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் சென்றுவிடும். மேலும், இந்த ஜிபிஎஸ் டிராக்கர் ஆங்க்லெட்டை கழற்ற முயன்றாலும் கூட போலீசாருக்கு தகவல் பறந்துவிடும். உடனடியாக அந்த நபரைப் பிடிக்க போலீஸ் படை திரண்டுவிடும். இதன் மூலம் சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசல் குறையும் அதேநேரம் அந்த நபரையும் தொடர்ந்து கண்காணிக்க முடியும். இந்தியாவில் என்ன மாதிரியான வசதிகளை கொண்ட டிராக்கரை போலீசார் பயன்படுத்துகிறார்கள் என துல்லியமான தகவல்கள் இல்லை.
பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் சிறையில் இருந்தோர் ஜாமீனில் வெளியே வரும் போது அவர்களை இந்த ஜிபிஎஸ் டிராக்கிங் மூலம் காஷ்மீர் போலீசார் கண்காணிக்கிறார்கள். இந்தியாவிலேயே கைதிகளைக் கண்காணிக்க இதுபோல ஜிபிஎஸ் டிராக்கரை பயன்படுத்தும் முதல் போலீசாராக காஷ்மீர் போலீசார் உள்ளனர். என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து காஷ்மீர் போலீசார் இந்த ஜிபிஎஸ் டிராக்கர் அன்க்லெட்டை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
எதற்காக இப்படி: முதலில் இப்போது குலாம் முகமது பட் என்பவருக்குப் பொருத்தி இருக்கிறார்கள். இவர் மீது உபா தொடங்கிப் பல பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக அவர் மீது வழக்கு இருந்தது. இதற்கிடையே அவர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும், அவர் மற்ற பயங்கரவாத வழக்குகளில் ஏற்கனவே குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் என்பதால் ஜாமீன் வழக்கு காஷ்மீர் போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பயங்கரவாத வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டோரை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் போலீசார் குறிப்பிட்டனர். காஷ்மீர் போலீசாரின் வாதங்களை ஏற்ற என்ஐஏ சிறப்பு கோர்ட் நீதிபதி முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
அதாவது குலாம் முகமது பட்டிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிபதி, அவருக்கு ஜிபிஎஸ் டிராக்கர் ஆங்க்லெட் கருவிதைய பொருத்தி அவரது நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்தே இப்போது போலீசார் அவருக்கு ஜிபிஎஸ் டிராக்கர் ஆங்க்லெட் கருவியைப் பொருத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications