பிரசாந்த் கிஷோர்- சந்திரபாபு நாயுடு மீட்டிங் காரணம் என்ன.. அவரே சொல்லிட்டார்.. இதுதான் விஷயமாம்
விசாகப்பட்டினம்: ஆந்திர தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் பிரசாந்த் கிஷோர், சந்திரபாபு நாயுடு மீட்டிங் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவரே சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் அடுத்தாண்டு லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடைபெற இருக்கிறது. அங்கே இப்போது ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது.

அங்கே தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கே ஜெகன் மோகன் ரெட்டிக்கும் தெலுங்கு தேசம் கட்சியும் கடும் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.
திடீர் சந்திப்பு: ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை சனிக்கிழமை சந்தித்தார். கடந்த 2019ஆம் ஆண்டில் ஆந்திராவில் சட்டசபைத் தேர்தல் நடந்த போது ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வெல்ல உதவியது பிரசாந்த் கிஷோர் தான்.
இந்தச் சூழலில் ஜெகன் மோகனுக்கு எதிராக அரசியல் செய்யும் சந்திரபாபு நாயுடுவை அவர் சந்தித்துள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் என்பவருடன் பிரசாந்த் கிஷோர் கன்னவரம் விமான நிலையத்தில் இருந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாது. இந்த திடீர் நச்திப்பு இணையத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. இதற்கிடையே இந்தச் சந்திப்பு குறித்து பிரசாந்த் கிஷோர் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
பிகே மறுப்பு: இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு.. நாங்கள் சந்தித்துக் கொண்டதில் மற்றவர்களுக்கு என்ன அவ்வளவு உற்சாகம் என்று புரியவில்லை. சந்திரபாபு நாயுடு ஒரு மூத்த தலைவர், அவர் என்னைச் சந்திக்க விரும்பினார், அதனால் இங்கு வந்து அவரை சந்தித்தேன்" என்று அவர் தெரிவித்தார்.
கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து நாரா லோகேஷ் மற்றும் பிரசாந்த் கிஷோர் இருவரும் ஒரே வாகனத்தில் சென்று உண்டவல்லி என்ற பகுதியில் உள்ள சந்திரபாபுவின் இல்லத்துக்குச் சென்றனர்.
3 மணி நேர மீட்டிங்: பிரசாந்த் கிஷோருடன் தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் ஆலோசகரான ஷோ டைம் கன்சல்டன்சி நிறுவனத்தின் ராபின் ஷர்மாவும் உடன் சென்றார். சந்திரபாபு மற்றும் பிரசாந்த் கிஷோர் இடையேயான சந்திப்பு மூன்று மணி நேர நடந்ததாகவும் அதில் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
ஜெகன் மோகன் ரெட்டி அரசு குறித்தும் அவரது செல்வாக்கு, அரசின் திட்டங்கள் ஆகியவை குறித்து விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டது. ஜெகன் மோகனின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மின்சாரக் கட்டணம், அதிக வரி உள்ளிட்ட காரணங்களால் இளைஞர்களிடம் அதிருப்தி இருப்பதாக பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டார்.
இது குறித்து விவரம் அறிந்தவர்கள் மேலும் கூறுகையில், "தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைத் தவறாக நடத்துவது, வரவிருக்கும் தேர்தல்களைப் பாதிக்கலாம். எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தைக் கையில் எடுத்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவுக்கு பிரசாந்த் கிஷோர் பரிந்துரைத்தார்" என்று கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications