பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாடு எம்.பி.க்கள் பேசியது என்ன?
சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்ட மசோதா இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கடும் எதிர்ப்புக்கிடையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பாஜக எம்.பி கிரோடி லால் மீனா, இதனை தனிநபர் மசோதாவாகத் தாக்கல் செய்தார்.
இது நாட்டின் பன்முக கலாசாரத்தை பாதிக்கும் எனக் கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் திரும்பப் பெறவேண்டும் என்றும், மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தான்கர் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதை ஏற்கக்கூடாது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என பா.ஜ.க தலைவர்கள் பலரும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துவருகின்றனர். அது தொடர்பான வழக்கின் விசாரணையும் உச்ச நீதிமன்றத்தில் நடந்தவண்ணமே இருக்கிறது. மேலும், தேர்தல் நெருங்கும் மாநிலங்களில், பா.ஜ.க தலைவர்கள் பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவோம் என வாக்குறுதிகளாகவே கூறிவருகின்றனர்.
அது என்ன பொது சிவில் சட்டம்? விரிவாகப் பார்க்கலாம்…
குற்றவியல் நடவடிக்கைக்கான சட்டத்தைப் பொறுத்தவரை, இந்தியா முழுக்க அனைவருக்கும் ஒன்றுதான். அதாவது கொலை, கொள்ளை போன்ற குற்றவியல் சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் ஒரே தண்டனை தான். ஆனால், சிவில் சட்டங்களைப் பொறுத்தவரை, அப்படியில்லை. திருமணம், விவாகரத்து உள்ளிட்ட விஷயங்களுக்கு பல்வேறு மதங்களுக்கு பல்வேறு சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. அதாவது, தனிநபர்களுக்கான சிவில் சட்டம் மதங்களுக்கு மதம் மாறுபடும்.இப்படி இந்தியாவில் உள்ள, பல்வேறு சிவில் சட்டங்களை நீக்கி, அனைத்து தரப்பினருக்கும் ஒரே சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என பாஜக உள்ளிட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், பல்வேறு மதங்களை உள்ளடக்கிய இந்தியா போன்ற நாட்டில் பொது சிவில் சட்டம் என்பது சரியாக இருக்காது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில், தற்போது இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில், பாஜக எம்பி கிரோடி லால் மீனா, மாநிலங்களவையில் பொது சிவில் சட்டம் தொடர்பாக தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்தார். நாடு முழுவதும் செயல்படுத்தும் வகையில் ஒரு பொது சிவில் சட்டத்தை உருவாக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என இந்த மசோதா வலியுறுத்துகிறது.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொது சிவில் சட்டம் நாட்டை சிதைக்கும் என்றும் நாட்டின் பன்முக கலாசாரத்தை பாதிக்கும் என்றும் கூறி இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி-க்கள், இதுபோன்ற ஒரு சட்டத்தை பல்வேறு சமூகங்களின் ஆலோசனை இல்லாமல் கொண்டு வரக் கூடாது என்றும் கூறினர்.சட்ட கமிஷன் அறிக்கையைக் குறிப்பிட்டு பேசிய சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ், நாட்டில் பொது சிவில் சட்டம் தேவையில்லை என்றும் அது விரும்பத்தக்கது இல்லை என்றும் தெரிவித்தார். ஒரே மாதிரியான சிவில் சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று திமுகவின் திருச்சி சிவா கூறினார். அரசியலமைப்பின் விதிகளுக்கு எதிரானது என்று கூறி, சமாஜ்வாதி கட்சியின் ஆர்ஜி வர்மாவும் இந்த மசோதாவை எதிர்த்தார்.
அப்போது ஆளும் கட்சி உறுப்பினர்களைப் பார்த்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேசபக்தி என்பது உங்கள் முற்றுரிமை அல்ல. நாம் நாட்டை பேரழிவை நோக்கி, சிதைவை நோக்கி இட்டுச்செல்கிறோம். சிறுபான்மையினர் மோசமாகப் புண்படுகின்றனர். எனவே, இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படக்கூடாது. இது போன்ற விவகாரத்தை எதிர்கொள்ளவேண்டியிருப்பதால் இந்த நாள் ஒரு அவமானமான, துயரமான நாளாகும் என்று கூறினார் வைகோ.அப்போது பேசிய மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், அரசியலமைப்பு வழிகாட்டுதல் கொள்கையின் கீழ் உள்ள ஒரு பிரச்னையை எழுப்புவதற்கு எம்பி-க்கு சட்டப்பூர்வமான உரிமை உள்ளது. இந்த மசோதா குறித்து அவை விவாதிக்கட்டும். இந்த நேரத்தில் அரசு மீது அவதூறு எழுப்புவது, அரசை விமர்சிக்க முயற்சி செய்வது தேவையற்றது என்றார்.
இதையடுத்து, எம்.பி கிரோடி லால் மீனா இந்த தனிநபர் மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்கலாமா என்று மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் நிறைய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் இல்லை.வாக்கெடுப்பில் மசோதாவை தாக்கல் செய்வதற்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிராக 23 வாக்குகளும் பதிவாயின. இதையடுத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது.தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில், வரும் நாட்களில் இந்த மசோதா பேசுபொருளாகும் என்று தெரிகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: • ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக் • டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர் • இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம் • யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















Click it and Unblock the Notifications