இத்தனை கிலோ தங்கமா? பூரி ஜெகநாதர் கோவில் ரகசிய அறையில் இருப்பது என்ன? 46 ஆண்டுக்கு பின் திறப்பு
புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலின் பொக்கிஷ அறையான ‛ரத்ன பந்தர்' 46 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அந்த அறையின் உள்ளே இருக்கும் தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்கள் பற்றிய முக்கிய விபரங்கள் வெளியாகி உள்ளன.
ஒடிசாவில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதன்மூலம் பிஜு ஜனதாதளம் கட்சியின் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து புதிய முதல்வராக பாஜகவின் மோகன் சரண் மாஜி பதவியேற்று செயல்பட்டு வருகிறார்.

இந்த மாநிலத்தில் உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் உள்ளது. 12ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோவிலில் பொக்கிஷ அறையான ‛ரத்ன பந்தர்' உள்ளது. இந்த அறையில் தான் ஆட்சி செய்த மன்னர்கள் வழங்கிய விலை மதிப்பு மிக்க ஆபரணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் ஒடிசா தேர்தலில் இந்த கோவில் விவகாரம் பெரும் பேசும்பொருளானது. அதாவது நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக தமிழகத்தை சேர்ந்த மாஜி ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் இருந்தார். இதனை பாஜக விமர்சனம் செய்தது. பிஜு ஜனதாதளம் மீண்டும் வென்றால் ஒடிசா பூரி ஜெகன்நாதர் கோவில் பொக்கிஷ அறையின் சாவி தமிழர் கைக்கு செல்லும் என்று பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர். இது பெரிய அளவில் பேசும் பொருளானது.
அதேபோல் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஒடிசாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பூரி ஜெகநாதர் கோவிலின் பொக்கிஷ அறை திறக்கப்பட்டு நகைகள் சரிபார்க்கப்பட்டு அதன் விபரம் டிஜிட்டல் மயமாக்கப்படும் என தெரிவித்தார். அதன்படி தற்போது ஒடிசா சட்டசபை தேர்தலில் பாஜக வென்ற நிலையில் பூரி ஜெகநாதர் கோவிலின் பொக்கிஷ அறையான ‛ரத்ன பந்தர்' இன்று திறக்கப்பட்டது. இதற்கு முன்பு 1978 ல் இந்த அறை திறக்கப்பட்ட நிலையில் தற்போது 46 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அறை திறக்கப்பட்டுள்ளது.
இதற்காக மாநில அரசு சார்பில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதி பிஸ்வநாத் ராத், ஜெகநாதர் கோவில் நிர்வாக தலைமை நிர்வாகி அரபிந்தா பதீ, ஏஎஸ்ஐ கண்காணிப்பாளர் டிபி கடநாயக் மற்றும் பூரியின் பட்டத்து மன்னர் 'கஜபதி மஹாராஜா'வின் பிரதிநிதி உள்பட 11 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் முன்னிலையில் தான் இன்று பொக்கிஷ அறையான ‛ரத்ன பந்தர்' திறக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு பொக்கிஷ அறையில் இருந்து நகை, ஆபரணங்கள் இருந்த பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வெளியே எடுத்து வரப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் அந்த பொக்கிஷ அறையில் இருக்கும் தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்கள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இதுதொடர்பாக ஒடிசா மாநில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன. அதில் கூறியிருப்பதாவது:
ஒடிசா மன்னராக இருந்த அனங்கபீமா தேவ் கோவிலுக்கு நகைகள் தயாரிப்பதற்காக 2.5 லட்சம் மத்தாசு (madhas) தங்கத்தை நன்கொடையாக அளித்தார். இது இந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 2 அறைகள் உள்ளன. பிதர் பந்தர் என்பது உள்கருவூல அறையாகும். பஹார் என்பது வெளிப்புற கருவூலமாகும். இதில் வெளிப்புற கருவூல அறையில் தலா 120 தோலா (120 tolas, ஒரு தோலா என்பது 11.34 கிராம்) எடையுள்ள மூன்று தங்க நெக்லஸ்கள் உள்ளன.
உள்கருவூல அறையில் 74 தங்க ஆபரணங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தலா 100 தோலாவுக்கு மேலான எடை கொண்டவையாகும். இதில் தங்கம், வைரம், பவளம், முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட தட்டுக்கள், நகைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 140க்கும் மேற்பட்ட வெள்ளி நகைகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி பார்த்தால் பொக்கிஷ அறையில் 128 கிலோ தங்கம்; 221 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் கடந்த 1978 ம் ஆண்டில் இந்த அறை திறக்கப்பட்டு நகைகள் சரிபார்க்கப்பட்டன. அப்போது நகைகளை எண்ணி மதிப்பீடு செய்து முடிக்க 70 நாட்கள் ஆனதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் இந்த முறை நகைகளை விரைவாக மதிப்பீடு செய்து எதிர்கால குறிப்புக்காக ஆபரணங்கள் தொடர்பாக டிஜிட்டல் பட்டியலை உருவாக்க அம்மாநில பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.மேலும் நகை மதிப்பீடு பணி அனைத்தும் முழுவதுமாக வீடியோ ரெக்கார்டு செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications