குஜராத் முதல்வராக மீண்டும் பதவியேற்ற பூபேந்திர படேல்! ஓயாத உழைப்பு! அதிர்ந்து பேசாத குணம்! யார் இவர்
காந்திநகர்: குஜராத்தில் பாஜக 7ஆவது முறையாகத் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், அம்மாநில முதல்வராகத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பூபேந்திர படேல் பதவியேற்று உள்ளார்.
குஜராத் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் சமீபத்தில் தான் வெளியானது. இதில் இதுவரை எந்தவொரு கட்சியும் பெறாத அளவுக்கு குஜராத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. மொத்தம் உள்ள 182 இடங்களில் 156 இடங்களை பாஜக கைப்பற்றியது.
அதேநேரம் முந்தைய தேர்தலில் 77 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ் கட்சியால் இந்த முறை வெறும் 17 இடங்களில் மட்டுமே வென்றது. முதல்முறையாகக் குஜராத்தில் களமிறங்கிய ஆம் ஆத்மி 5 இடங்களில் வென்றது.

குஜராத்
இந்த மெகா வெற்றியின் மூலம் குஜராத்தில் அதிக இடங்களை வென்ற அரசியல் கட்சி என்ற சாதனையை பாஜக படைத்துள்ளது. மேலும், மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் தொடர்ந்து 7 முறை வென்ற நிலையில், அந்த சாதனையையும் சமன் செய்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக இன்று முதல்வராகப் பதவியேற்றார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டனர். மேலும், பாஜக தலைவர் ஜேபி நட்டா, மற்றும் பல மத்திய அமைச்சர்களும் அதில் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து ஓ பன்னீர்செல்வமும் கூட இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

பெரிய வெற்றி
விஜய் ரூபானி முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முதலில் 2021 செப்.21 மாதம் முதல்வராக அறிவிக்கப்பட்டார். அவர் முதல்வராக அறிவிக்கப்படுவார் என யாருமே முதலில் எதிர்பார்க்கவில்லை. ஆனால், எதிர்பார்க்காத வகையில் கிடைத்த இந்தப் பதவியை அவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளார். மாநில அரசு மீது அதிருப்தி இருந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில், அதைப் பொய்யாக்கி பாஜகவை அரியணை ஏற வைத்துள்ளார். இந்தத் தேர்தலில் பூபேந்திர படேல் சுமார் 1.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

பெரும்பான்மை சமூகம்
சரி யார் இந்த பூபேந்திர படேல்.. வாங்கப் பார்க்கலாம். 2021இல் பூபேந்திர படேல் முதல்வராவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வந்தவர் என்றாலும் கூட அவர் அந்தத் தேர்தலில் தான் முதல் முறையாக எம்எல்ஏ ஆகியிருந்தார். முதல்முறை எம்எல்ஏவுக்கு பாஜகவில் முதல்வர் பதவி கிடைப்பது எப்போதும் நடக்காது. கத்வா படிதார் சமூக வாக்காளர்களைக் கவரவே, அதே சமூகத்தைச் சேர்ந்த பூபேந்திர படேலை முதல்வராக அறிவித்தது பாஜக. படிதார் சமூகத்தில் இருந்து முதல்வராக ஒருவர் வருவது இதுவே முதல்முறை.

ஆர்எஸ்எஸ்
குஜராத்தில் படிதார் சமூகத்திற்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. மேலும், கல்வி, ரியல் எஸ்டேட் மற்றும் கூட்டுறவுத் துறைகளில் வலுவான செல்வாக்கும் அவர்களுக்கு உள்ளது. இதன் காரணமாகவே முதல்வர் பெயருக்கு அவரை டிக் அடித்தது பாஜக. அதற்காக வெறுமன சமூகத்திற்காக அவருக்கு முதல்வர் பதவி கிடைத்தது எனச் சொல்ல முடியாது. கடும் உழைப்பிற்குப் பின்னரே அவர் முதல்வர் பொறுப்பிற்கு வந்துள்ளார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து அரசியலுக்கு வந்த பூபேந்திர படேல் படிப்படியாக உழைத்து முதல்வர் பதவிக்கு வந்துள்ளார்.

பூபேந்திர படேல்
பூபேந்திர படேல் அகமதாபாத்தில் ஜூலை 1962இல் பிறந்தவர். சிறு வயதில் இருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பணியாற்றியவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றிய இவர், அதைத் தொடர்ந்து நகராட்சி கவுன்சிலராகவும் இருந்துள்ளார். மூன்று முறை அகமதாபாத் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் பல்வேறு பொறுப்புகளைக் கவனித்து வந்த இவர், அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக 2015 முதல் 2017 வரை இருந்துள்ளார். படிப்பு எனப் பார்த்தால் இவர் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படித்துள்ளார்.

பிஸ்னஸ்மேன்
இளமைக் காலத்தில் பல்வேறு தொழில்களைச் செய்துள்ள இவர், கொஞ்ச காலம் பட்டாசு கடைகளையும் நடத்தி வந்தார். அதன் பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் கட்டுமான பிரிவில் சில ஆண்டுகள் வேலை செய்தார். அதில் கிடைத்த அனுபவத்தை வைத்து அவரே ஒரு கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கினார். அதை வெற்றிகரமான நிறுவனமாக மாற்றிய இவர், அப்பகுதியில் முக்கிய கட்டுமான தொழிலதிபராக மாறினார். அரசியலுக்கு வந்த பிறகு அந்த கட்டுமான நிறுவனத்தை அவரது மகனும் மருமகனும் தான் இப்போது கவனித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி
பூபேந்திர படேலை முதல்வராக நியமித்த சமயத்தில், பிரதமர் மோடி அவரை அமைதியான அதேநேரம் மிகவும் உறுதியான தலைவர் என்று குறிப்பிட்டுப் பாராட்டியிருந்தார். அதேபோல இளமைக் காலத்தில் இருந்தே அவர் கட்சியின் அடிமட்ட தொண்டர்களுடன் டச்சில் இருப்பார். முதல்வரான பிறகும் அதைத் தொடர்வதே அவரது வெற்றிக்குக் காரணம் என்கிறார் அவரது இளமைக்கால நண்பர் மீனாக்சிபென்! இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்கும் அவரை பல தலைவர்களும் வாழ்த்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications