ஜெயிப்போமா? கலக்கத்தில் கங்கனா ரனாவத்? காங்கிரஸ் வேட்பாளர பாருங்க.. யார் இந்த விக்ரமாதித்ய சிங்?
சிம்லா: வரும் லோக்சபா தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக விக்ரமாதித்ய சிங் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் விக்ரமாதித்ய சிங்கை மீறி கங்கனா ரனாவத் வெல்வது எளிதில்லை என கூறப்படும் நிலையில் அவர் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்தவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் தாம்தூம் திரைப்படத்தில் நடித்துள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி லோக்சபா தொகுதியில் கங்கனா ரனாவத் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மண்டி என்பது கங்கனா ரனாவத்தின் சொந்த தொகுதியாகும். இந்த தொகுதிக்கு ஏப்ரல் 1ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் கங்கனா ரனாவத் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தான் கங்கனா ரனாவத்தை மண்டி தொகுதியில் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி புதிய அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. அதன்படி முன்னாள் அமைச்சரும், சிம்லா புறநகர் தொகுதி எம்எல்ஏவான விக்ரமாதித்ய சிங் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இது கங்கனா ரனாவத்துக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான வீரபத்ரசிங்கின் மகன் தான் இவர். இவரது தாய் பெயர் பிரதீபா சிங். இவர் இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவராகவும், மண்டி தொகுதி எம்பியாகவும் உள்ளார்.
பிரதீபா சிங் இந்த தொகுதியில் 2004, 2013 இடைத்தேர்தல் மற்றும் 2021 இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் அவருக்கு பதில் மகன் விக்ரமாதித்ய சிங் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதி விக்ரமாதித்ய சிங் குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியாக உள்ளது. இங்கு 3 இடைத்தேர்தல்கள் உள்பட மொத்தம் 20 முறை லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் விக்ரமாதித்ய சிங்கின் தந்தை வீரபத்ரசிங் 3 முறை எம்பியாகவும், வீரபத்ரசிங்கின் மனைவியும், விக்ரமாதித்ய சிங்கின் தாய் பிரதீபா சிங் 3 முறை எம்பியாகவும் இருந்துள்ளனர். இந்நிலையில் தான் தற்போது விக்ரமாதித்ய சிங் முதல் முறையாக போட்டியிடுகிறார்.
விக்ரமாதித்ய சிங் கடந்த 1989ம் ஆண்டு அக்டோபர் 17 ம் தேதி பிறந்தார். இவரது தந்தை வீரபத்ரசிங். இவர் 6 முறை இமாச்சல பிரதேச முதல்வராக இருந்தார். இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸில் அசைக்க முடியாத தலைவராக இருந்தார். 2021ல் அவர் மறைந்துவிட்டார். விக்ரமாதித்ய சிங், வரலாறு படிப்பில் மாஸ்டர் டிகிரி முடித்துள்ளார்.
2013ல் இமாச்சல பிரதேச மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். 2017 வரை அவர் இந்த பொறுப்பில் இருந்தார். 2017 ல் சிம்லா புறநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு சமீபத்தில் நடந்த தேர்தலில் அவர் மீண்டும் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். இமாச்சல பிரேதசத்தில் முக்கிய காங்கிரஸ் தலைவராக விக்ரமாதித்ய சிங் வளர்ந்து வருகிறார்.
குறிப்பாக 2021ல் தந்தை வீரபத்ரசிங் மறைந்த பிறகு விக்ரமாதித்ய சிங்கிற்கு இமாச்சல் அரசியலில் முக்கியத்துவம் அதிகரித்தது. இமாச்சல பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது வீரபத்ரசிங்கின் பெயரும் முதல்வர் பதவிக்கு அடிப்பட்டது. ஆனால் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை. அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக வும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார்.
அதன்பிறகு விக்ரமாதித்ய சிங் கடந்த ஆண்டு முதல்வர் சுக்விந்த் சாகுவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் வெளியேறுவார் என கூறப்பட்ட நிலையில் காங்கிரஸ் மேற்பார்வையாளர் பூபேந்தர் சிங் ஹுடா, பூபேஷ் பாகேல், டிகே சிவக்குமார் உள்ளிட்டவர்கள் அவரை சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் தான் விக்ரமாதித்ய சிங் வரும் லோக்சபா தேர்தலில் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத்தை எதிர்த்து களமிறக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications