பாலிவுட்டின் பணம் வேணும்.. ஆனா இந்தி வேணாமா? வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட பவன் கல்யாண்!
அமராவதி: ஹைதராபாத்: மும்மொழி திணிப்புக்கு எதிராக தென் மாநிலங்கள் கொந்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், பாலிவுட்.. ஹாலிவுட் என கதை சொல்லி வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்டிருக்கிறார் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண். "தமிழ் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய சொல்லி, பாலிவுட் பணத்தை வாங்கும் தமிழக அரசியல்வாதிகள், இந்தியை எதிர்ப்பது ஏன்?" என்று பவன்கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலடியாக, "எங்களிடம் அதிக வரியை வாங்கிக்கொண்டு இந்தி பேசும் மாநிலங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்குவது ஏன்?" என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் , ஜனசேனா மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக உள்ளார்.

இந்நிலையில் தான் ஜனசேனா கட்சி உருவானதன் 12வது ஆண்டு விழா ஆந்திர மாநிலம் பிதாபுரத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் நடிகரும், துணை முதல்வருமான பவன் கல்யாண் தமிழக அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.
தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மும்மொழி கொள்கை மூலம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக திமுக, அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக, நடிகர் விஜயின் தவெக, பாமக உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் மும்மொழி கொள்கை விஷயத்தில் தமிழகத்தில் பாஜக மட்டுமே ஆதரித்து வருகிறது. பிற பெரும்பான்மையான கட்சிகள் அதனை எதிர்த்து வருகின்றன.
இப்படியான சூழலில் தான் இந்தியை ஏற்காமல் இருப்பது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களை நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக பவன் கல்யாண் பேசியதாவது: இந்தியாவுக்கு தமிழ் உள்பட பல மொழிகள் தேவையாக உள்ளது. இருமொழிகள் மட்டுமே போதாது. நம் நாட்டில் ஒருமைப்பாட்டை பேணுவதற்கு மட்டுமின்றி மக்களிடையே அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்க பன்முகதன்மை அடிப்படையில் பல மொழிகளை ஏற்க வேண்டும்.
அதேபோல் சமஸ்கிருதத்தை சிலர் ஏன் விமர்சிக்கின்றனர்? என்பது எனக்கு புரியவில்லை. மேலும் தமிழ்நாடு அரசியல்வாதிகள் தங்களின் திரைப்படங்களை பணத்துக்காக இந்தியில் டப் செய்ய கூறிவிட்டு இந்தியை எதிர்ப்பது ஏன்? என்று எனக்கு புரியவில்லை. பாலிவுட்டில் இருந்து பணத்தை விரும்பும் அவர்கள் ஏன் இந்தியை ஏற்க மறுக்கின்றனர்? இது எந்த மாதிரியான லாஜிக்?'' என்று விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் அவர் பேசும்போது, ‛‛நான் செல்லும் பாதையில் இருக்கும் இருள், குழிகளை பற்றி பயப்படமாட்டேன். வெளிச்சம் இல்லாவிட்டாலும் கூட அச்சமின்றி நடந்து செல்வேன். 2014ல் கட்சி தொடங்கி படிப்படியாக முன்னேறியுள்ளோம். இந்த வேளையில் தமிழ்நாட்டு மக்களுக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். அங்கு நான் அதிக நேரம் செலவழிக்காவிட்டாலும் கூட அவர்களின் சப்போர்ட்டும் எனக்கு இருக்கிறது'' என்றார்.
"தமிழ் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய சொல்லி, பாலிவுட் பணத்தை வாங்கும் தமிழக அரசியல்வாதிகள், இந்தியை எதிர்ப்பது ஏன்?" என்று பவன்கல்யாண் கேள்வி எழுப்பியதற்கு பதிலடியாக, "எங்களிடம் அதிக வரியை வாங்கிக்கொண்டு இந்தி பேசும் மாநிலங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்குவது ஏன்?" என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications