ஊழல் செய்வது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டுமா? கீர்த்தி ஆசாத் சொல்வதை கேளுங்கள்
கொச்சி: டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்ற ஊழக்கு எதிராக தமது போராட்டம் தொடரும் என்று பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எம்.பியான கீர்த்தி ஆசாத் மீண்டும் தெரிவித்தார்.
டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் பெரும் ஊழல் நடைபெற்றதாக பாஜக எம்.பி கீர்த்தி ஆசாத் குற்றம்சாட்டியிருந்தார். அவர் குற்றம்சாட்டி தெரிவித்த ஆண்டுகளில், கிரிக்கெட் சங்க தலைவராக தற்போதைய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பதவி வகித்ததால், அதிர்ச்சியடைந்த பாஜக, கீர்த்தி ஆசாத்தை பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.

கீர்த்தி ஆசாத் மீது டெல்லி கிரிக்கெட் சங்கம் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், கொச்சி வந்திருந்த கீர்த்தி ஆசாத், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊழலுக்கு எதிரான எனது போராட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தனிப்பட்ட முறையில் யாருக்கும் எதிராக நான் செயல்படவில்லை. அருண் ஜெட்லிக்கு, நான் 500 இ-மெயில், 200 கடிதம் அனுப்பியும், எந்த பலனும் கிடைக்கவில்லை.
ஊழலுக்கு எதிராக போராடுவது எனது குறிக்கோள். ஒருவேளை ஊழல் செய்வது எப்படி என்று ஒருவர் கற்றுக்கொள்ள விரும்பினால் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் வந்து சேருவது சிறப்பானது.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவரிடம் விளக்கம் கொடுக்கப்படும். இவ்வாறு கீர்த்தி ஆசாத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications