மானபங்கம் செய்த கணவரின் நண்பர்: தூக்கு போட்டு தற்கொலை செய்த இளம்பெண்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் கணவரின் நண்பரால் மானபங்கம் செய்யப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள மதனபேட்டை போயா பஸ்தியைச் சேர்ந்தவர் ஜெயதேவ் ரெட்டி. அவர் தனது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த நண்பனின் 24 வயது மனைவியை பின்தொடர்ந்துள்ளார். மேலும் கடந்த மாதம் ரெட்டி நண்பனின் மனைவியை கையைப் பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளார். இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரெட்டியை கைது செய்தனர். ஆனால் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் ரெட்டியின் நண்பர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். இதனால் மனஅழுத்தம் அடைந்த அந்த பெண் திங்கிட்கிழமை இரவு தனது தாய் வீட்டில் தனியாக இருக்கையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற அவரது தாய் வீடு திரும்பியபோது தான் அவர் தூக்கில் பிணமாகத் தொங்கியது தெரிய வந்தது.
அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, நடந்த சம்பவங்களால் மன அழுத்தத்தில் உள்ளேன். அதனால் இனியும் வாழ விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஜெயதேவின் செயலால் தான் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார் என்பதால் அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications