திருமணம் செய்யாமல் "லிவ் இன்" உறவில் வாழ்ந்தாலும்.. பெண்ணுக்கு ஜீவனாம்சம் கிடைக்கும்- மபி ஐகோர்ட்
போபால்: லிவ் இன் உறவில் வாழும் ஜோடி திருமணம் செய்யவில்லை என்றாலும் கூட பிரிந்து சென்றால் அந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் சமீப காலங்களாக லிவ் இன் உறவுகள் அதிகரித்து வருகிறது. அதாவது ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாமல் ஒன்றாக இணைந்து வாழ்வது தான் இந்த லிவ் இன் உறவுகள்.

மேலை நாடுகளில் பொதுவாகத் திருமணத்திற்கு முன்பு இதுபோல ஒன்றாக இருக்கும் லிவ் இன் உறவு முறை புகழ் பெற்றது. அதேபோலத் தான் இப்போது இந்தியாவிலும் லிவ் இன் முறை அதிகரித்து வருகிறது.
லிவ் இன் உறவு: இருப்பினும், இந்த லிவ் இன் உறவில் வாழும் பெண்களுக்குச் சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லை என்ற விமர்சனம் இருந்து கொண்டே இருக்கிறது. அதாவது பல ஆண்டுகள் லிவ் இன் உறவில் இருந்துவிட்டு திடீரென ஆண் விட்டுச் சென்றால் எதுவும் கேட்க முடியாது. மேலும், இருவருக்கும் குழந்தை பிறந்தால் அதில் இருக்கும் சிக்கல்கள் என லிஸ்ட் பெரிதாகப் போகிறது.
லிவ் இன் உறவு முறை அதிகரிக்கும் நிலையில், இதில் உள்ள பெண்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் மத்தியப் பிரதேச ஐகோர்ட் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
திருமணம் செய்யாவிட்டாலும்: அதாவது சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், ஆணுடன் கணிசமான காலம் வாழும் பெண், பிரிந்து சென்றால், அவர்களுக்கு ஜீவனாம்சம் கிடைக்கும் என மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது லிவ் இன் உறவில் வாழும் பெண்களின் உரிமைகளை அங்கீகரிப்பதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்று பலரும் பாராட்டி உள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் லிவ் இன் உறவில் இருந்த ஒரு ஜோடி பிரிந்துள்ளது. இது தொடர்பாகப் பெண் வழக்கு தொடர்ந்த நிலையில், அந்த பெண்ணுக்கு மாதாந்திர ஜீவனாம்சமாக ரூ. 1,500 வழங்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அந்த ஆண் மத்தியப் பிரதேச ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவில் தீன் அம்மாநில ஐகோர்ட் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
அதாவது அந்த தம்பதி ஒன்றாக வாழ்ந்ததற்கான ஆதாரம் இருந்தால், பராமரிப்பு தொகையைத் தராமல் மறுக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டிய உயர் நீதிமன்றம், ஆணும் பெண்ணும் கணவன்-மனைவியாக வாழ்ந்ததாக முடிவு செய்தது. இது மட்டுமின்றி லிவ் இன் உறவில் இருந்த போது அந்த ஜோடிக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளதால் அந்த பெண்ணுக்குப் பராமரிப்பு உரிமை இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இந்தியாவில் லிவ் இன் உறவுகளில் சட்டப் பாதுகாப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த உத்தரவு முக்கியமான ஒன்றாக இருக்கிறது.. திருமணம் என்ற கட்டமைப்பில் இல்லை என்றால் இந்தியாவில் பெண்களுக்கு உரியச் சட்டப் பாதுகாப்பு கிடைப்பதில்லை என்ற புகார்கள் அதிகரித்த நிலையில், ஜீவனாம்சம் தொடர்பாக மபி ஐகோர்ட் அளித்த இந்தத் தீர்ப்பு ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications