பழங்குடி பெண்களை பலாத்காரம் செய்கின்றனர் மாவோயிஸ்டுகள்: மத்திய அரசு 'பகீர்' தகவல்!
டெல்லி: மாவோயிஸ்ட் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் பழங்குடி இன பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிர்ரென் ரிஜுஜூ தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக மத்திய இணை அமைச்சர் கிர்ரென் ரிஜுஜூ அளித்த பதில்:
பாலியல் ரீதியான பழங்குடி இன பெண்களை மாவோயிஸ்டுகள் சுரண்டுவது அல்லது துன்புறுத்துவது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு வந்துள்ளன. ஒடிஷா, மகாராஷ்டிரா, பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இத்தகைய தகவல்கள் கிடைத்துள்ளன.

பலாத்காரம், கட்டாய திருமணம்
இந்த தகவல்கள் ஊடகங்களிலும் பரவலாக வந்துள்ளன. மூத்த மாவோயிஸ்டு தலைவர்களால் பழங்குடி இன பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்; திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துகின்றனர்.

கட்டாய கருக்கலைப்பு
மாவோயிஸ்ட் இயக்க பெண்கள் கட்டாய கருக்கலைப்புக்கும் உட்படுத்தப்படுகின்றனர். சத்தீஸ்கரில் சரணடைந்த ஆண் மாவோயிஸ்டுகளே இத்தகவலையும் தெர்வித்துள்ளனர். இதேபோல் சரணடைந்த பெண் மாவோயிஸ்டுகளும் இது போன்ற தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

குழந்தை பெற தடை
மூத்த மாவோயிஸ்டு இயக்க தலைவர் விரும்பினால்தான் பெண் மாவோயிஸ்டுகள் குழந்தைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை இருக்கிறது. மேலும் ஏழை குடும்பங்களில் இருந்து குழந்தைகளை மாவோயிஸ்டுகள் இயக்கத்தில் இணைப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கிறது.

அப்பாவிகள் படுகொலை
போலீஸ் இன்பார்மர்கள் என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களையும் மாவோயிஸ்டுகள் படுகொலை செய்துள்ளனர்.

4,955 பேரை கொன்ற மாவோயிஸ்டுகள்
2004ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு ஜூலை 15-ந் தேதி வரை மொத்தம் 4,955 பேரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடி இனத்தவரே.
இவ்வாறு அமைச்சர் ரிஜுஜூ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications