100% எலக்ட்ரிக் வாகனங்கள்.. புதிய சாதனையை நோக்கி நகரும் யோகியின் உ.பி. அரசு.. ஏகப்பட்ட சலுகைகள்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மின்சார வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்க அரசு பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2030க்குள் அனைத்து வாகனங்களையும் மின்சார வாகனங்களாக மாற்ற மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
உலகம் முழுவதும் படிம எரிபொருளான பெட்ரோல், டீசல் போன்றவற்றின் மூலம் இயங்கும் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு வளிமண்டலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என தொடர்ச்சியாக விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். எனவே இந்த வாகனங்களின் பயன்பாடுகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று உலக நாடுகள் ஒப்புக்கொண்டன. இந்தியாவிலும் மின்சார வாகனங்களின் பயன்பாடுகள் மெல்ல அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் எதிர்வரும் 2030ம் ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடுகளை உறுதிப்படுத்த யோகி ஆதித்யநாத் அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது, "மின்சார வாகனங்கள் காற்று மாசை குறைக்கும் என்பது நிரூபணமாகியுள்ளது. எனவே இனி மாநிலம் முழுவதும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக சிறப்பு திட்டங்களையும் அறிவித்திருக்கிறோம். அதாவது, மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு வரி மற்றும் பதிவுக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மின் வாகனங்களை வாங்குவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு வரி மற்றும் பதிவுக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் இரண்டு விஷயங்கள் சாத்தியமாகும். முதல் விஷயம் மின்சார வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
அதேபோல மாநிலத்தில் மின்சார வாகனங்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். இது மாநிலத்தின் மாசுவை பாதியாக குறைக்கும். உத்தரப் பிரதேசத்தில் மக்கள் தொகை மட்டுமல்லாது வன உயிரினங்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். எனவே இதனை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். இதன் காரணத்தினால்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இனி உலகமே மின்சார வாகனங்களை நோக்கிதான் நகரும். அதற்கான முதற்படியில் உத்தரப் பிரதேசம் இருக்கிறது" என்று கூறியுள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.35 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதில் கணிசமான முதலீடுகள் மின்சார வாகனங்கள் உற்பத்தி தொடர்பானதுதான். எனவே விரைவில் உத்தரப் பிரதேசம் 100% மின்சார வாகனங்களை கொண்ட மாநிலமாக உருவாகும் என்று அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்ததை பாஜக அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது.
இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக புதியதாக நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அப்படியாகதான் இந்த 100% மின்சார வாகனம் என்கிற திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற திட்டங்களை போல இந்த திட்டமும் காலம் தாழ்த்தப்படாமல் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் யோகி அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications