நாகப்பாம்பை விட்டு கடிக்க வைத்து மனைவி, குழந்தையை கொன்ற கொடூர இளைஞர்.. திடுக்கிட வைத்த காரணம்
புவனேஸ்வர்: நாக பாம்பை விட்டு கடிக்க வைத்து தன் மனைவி மற்றும் மகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்தவரை ஒடிசா போலீசார் கைது செய்தனர். இயற்கையான மரணங்கள் நடந்தால் அரசு தரும் 8 லட்சம் (தலா 4லட்சம்) ரூபாய் பணத்திற்காக இப்படி திட்டமிட்டு கொன்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒடிசாவின் கன்ஜாராம் மாவட்டத்தில் உள்ள கபிசூர்யா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அத்திபாரா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பத்ரா. இவருக்கு 25 வயது ஆகிறது. இவரது மனைவி பெயர் பன்சாந்தி பத்ரா. இவர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தையுடன் கணேஷ் பத்ரா, பன்சாந்தி பத்ரா வசித்து வந்தார்கள்.

இந்நிலையில் கணேஷ் திருமணம் ஆனதில் இருந்தே வரதட்சணை கேட்டு மனைவியை டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொறுத்து பொறுத்து போன பன்சாந்தி பத்ரா தனது கணவர் கணேஷ்க்கு எதிராக கடந்த வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.. இதையடுத்து கணேஷை அழைத்து எச்சரித்த போலீசார், ஒழுங்காக இருக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர். அதன்பிறகு மூன்று மாதங்கள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். அந்த 3 மாதத்தில் எந்த பிரச்சனையும் கணேஷ் செய்யவில்லை..
திடீரென கடந்த அக்டோபர் 7ம் தேதி கணேஷின் மனைவி பன்சாந்தி மற்றும் அவரது குழந்தை ஆகியோர் காலையில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்து கணேஷ் கதறி அழுதார். உடனே அக்கம் பக்கத்தினர் ஒடிச்சென்று பார்த்தனர். அங்கு பன்சாந்தியும் குழந்தையும் உயிருக்கு போராடியது தெரியவந்ததது. இதையடுத்து உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையும் தாயும் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து தாய் மகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில், பன்சாந்தி மற்றும் குழந்தை ஆகியோர் நாகபாம்பு கடித்ததில் விஷம் ஏறி இறந்தது தெரியவந்தது. இதனிடையே இருவரையும் ஒரே நேரத்தில் எப்படி பாம்பு கடித்தது. பொதுவாக பாம்புகள இப்படி ஒரே நேரத்தில் இரண்டு பேரையும் திட்டமிட்டு தாக்க வேண்டிய அவசியமே இல்லை. அப்படி செய்யாது. பாம்பு உறங்கி கொண்டிருப்பவர்களின் வீட்டிற்குள் கடித்திருக்க வாய்ப்பு மிக குறைவு என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்தது.
இதனிடையே பன்சாந்தியின் தந்தை, தன் மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய தன் மருமகன் கணேஷ் தான் பாம்பை கடிக்க விட்டு மகளையும் பேத்தியையும் கொன்று இருப்பார் என்று குற்றம்சாட்டினார். இதையடுத்து போலீசார் இந்த விவகாரத்தை தீவிரமாக கருதி ரகசியமாக விசாரித்து வந்தனர்.
ஒடிசாவின் கன்ஜாராம் பகுதிகளில் உள்ள பாம்பாட்டிகளிடம் விசாரித்த போது கணேஷ் பந்த்ரா வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஒரு மாதங்களாக பல்வேறு இடங்களில் விசாரித்த போது பாம்பை விட்டு கணேஷ் தனது மனைவி மற்றும் மகளை கடிக்கவைத்து கொன்றது உறுதியானது. உறுதியான ஆதாரங்கள் சேர்த்த பின்னர் அதிரடியாக கணேஷ் பத்ராவை கைது செய்தனர்,.. அவரிடம் விசாரித்த போது தான் போலீஸை அதிர வைத்த திடுக்கிடும் விஷயம் வெளியானது,.
கணேஷ் பல்வேறு பாம்பாட்டிகளை சந்தித்து விஷம் நிறைந்த நாகபாம்பு கேட்டுள்ளார். சிவன் கோயிலுக்கு விட வேண்டும் என்று சொல்லி பாம்பை கேட்டுள்ளார். ஒருவழியாக கடந்த அக்டோபர் மாதம் 6ம்தேதி வாக்கில் பாம்பை வாங்கி உள்ளார். அந்த பாம்பை பாட்டிலில் வாங்கி வந்த அவர், அக்டோபர் 7ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் திறந்துவிட்டு மகளையும், மனைவியையும் கடிக்க விட்டு கொன்றுள்ளார். காலையில் ஒன்றும் தெரியாதது போல் நடித்து ஏமாற்றி உள்ளார்.

ஒடிசா அரசு விபத்து, பாம்பு கடி உள்ளிட்ட இயற்கை மரணம் அடைவோருக்கு 4 லட்சம் ரூபாய் தருகிறது. அதன்படி குழந்தைக்கு நான்கு லட்சம், மனைவிக்கு 4லட்சம் என 8 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று நினைத்து கணேஷ் பத்ரா இப்படி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் பாம்பு வாங்கிய பாம்பாட்டிக்கு இந்த விஷயம் எதுவுமே தெரியாமல் உள்ளது. அவரிடம் விசாரித்து வருகிறார்கள். மனைவி மகளை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்ற இளைஞர், ஒரு மாதம் கழித்து கைது செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications