கேரளாவை உலுக்கிய தற்கொலை.. பேருந்தில் வீடியோ எடுத்து வெளியிட்ட பெண் ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்!
கோழிக்கோடு: கேரளாவில் பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைதாகி சிறையில் இருந்த யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமின் வழங்கி கோழிக்கோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள பேருந்தில் தன்னை ஒருவர் தவறாக தொட்டதாக ஒரு பெண் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், அந்த நபர் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து தற்கொலை செய்துகொண்ட நபரை வீடியோ எடுத்த ஷிம்ஜிதா முஸ்தபா மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 21 நாட்கள் சிறையில் இருந்ததை கணக்கில் கொண்டு நிபந்தனைகளுடன் கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமின் அளித்துள்ளது.

கோழிக்கோட்டை சேர்ந்த தீபக் (42), ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் கண்ணூருக்குப் பயணம் செய்தார். அப்போது தீபக்குடன் அதே பேருந்தில் பயணம் செய்த ஷிம்ஜிதா என்ற பெண், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், தீபக் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக ஷிம்ஜிதா குற்றம்சாட்டினார். அவரின் தொடுதல் தற்செயலாக நடக்கவில்லை என்றும், இது பாலியல் வரம்பு மீறல் என்றும் ஷிம்ஜிதா குற்றம்சாட்டி இருந்தார்.
அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, தீபக் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனையடுத்து தீபக் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் மரணம் குறித்தும், அவர் பற்றி பரப்பப்பட்ட வீடியோ குறித்தும் கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
காவல் துறையின் விசாரணையை அடுத்து, தீபக் மீது பாலியல் ரீதியாக குற்றம்சாட்டி ஆன்லைனில் வீடியோ வெளியிட்ட பெண் ஷிம்ஜிதா முஸ்தபா (35) மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தீபக் தற்கொலை செய்துகொண்ட மறுநாள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் ஷிம்ஜிதாவின் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
தீபக்கின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. சமூக ஊடகப் புகழுக்காக ஷிம்ஜிதா, தீபக்கின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். ஷிம்ஜிதா வெளியிட்ட வீடியோ ஆன்லைனில் வெளியான உடனேயே தீபக்கை விமர்சித்து ஆன்லைனில் கடுமையான எதிர்வினைகள் வந்ததன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.












Click it and Unblock the Notifications